திருச்செங்காட்டங்குடி (கணபதீஸ்வரம்) தோன்றிய வரலாறு (கந்தபுராண குறிப்புகள்):

நாகப்பட்டினம் மாவட்டத்தில், காரைக்காலிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவிலும், நன்னிலத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும், திருப்புகலூரிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது செங்காட்டங்குடி. சிறுத்தொண்ட நாயனாரின் அவதார; முத்தித் தலமாகவும், தேவார; திருப்புகழ் பாடல் பெற்றுள்ள தலமாகவும் விளங்குவது. 

சிறுதொண்டர் வாழ்ந்திருந்த 7ஆம் நூற்றாண்டு காலகட்டத்திற்கு மிகமிக முற்பட்ட காலகட்டத்திலேயே, 'விநாயகப் பெருமானாலேயே இத்தலம் தோற்றுவிக்கப் பெற்றமையால், 'கணபதீஸ்வரம்' என்று போற்றப் பெற்று வருகின்றது. இனி இதற்கான அகச்சான்றுகளைக் கச்சியப்ப சிவாச்சாரியார் அருளியுள்ள கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாகவும், ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரம் வாயிலாகவும் அறிந்துணர்ந்துத் தெளிவுறுவோம்,  

(1)
விநாயக மூர்த்தி கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்தருள, அந்த அசுரனனின் உடலிலிருந்து வெளிப்பட்ட குருதியானது அவ்விடம் முழுவதும் பரவ, அதுமுதல் அப்பகுதி செங்காடு என்று பெயர் பெறுகின்றது,  

(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 250)
ஏடவிழ் அலங்கல் திண்தோள் இபமுகத்(து) அவுணன் மார்பில் 
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே 'செய்ய
காடெனப்' பெயர் பெற்றின்னும்' காண்தக இருந்ததம்மா

(பொருள்: நீத்தம் - வெள்ளம், கான் - காடு, செய்ய காடு - செங்காடு)

(2)
பின்னர் விக்னேஸ்வர மூர்த்தி அச்செங்காட்டில் சிவலிங்கத் திருமேனியொன்றைப் பிரதிஷ்டை செய்து, பெருங்  காதலுடன் சிவபரம்பொருளைப் பூசித்துப் பணிகின்றார். அதுமுதல் அத்தலம், 'கணபதீஸ்வரம்' என்றும் கூடுதலாகப் போற்றப் பெற்று, இன்றும் நம்மால் தரிசித்து மகிழக்கூடிய தன்மையில் சிறப்புடன் விளங்கி வருகின்றது,  

(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 264)
மீண்டு செங்காட்டில் ஓர்சார் மேவி மெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியும் தாதை தன்னுருத் தாபித்தேத்திப்
பூண்ட பேரன்பில் பூசை புரிந்தனன் புவியுளோர்க்குக்
காண்தகும் அனைய தானம் கணபதீச்சரம் அதென்பார்

(3)
ஞானசம்பந்தப் பெருமான், 'கணபதீஸ்வரம்' எனும் இத்திருப்பெயரைக் கொண்டே இத்தலத்திற்கான திருப்பதிகப் பாடல்கள் ஒவ்வொன்றையும் நிறைவு செய்கின்றார்,

(சம்பந்தர் தேவாரம்: கணபதீஸ்வரம் - திருப்பாடல் 1)
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங்குடிஅதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச்சரத்தானே

(4)
பரஞ்சோதியார் வடநாட்டிலுள்ள வாதாபி நகர மன்னரொருவரைப் போரில் வென்று வந்த நிகழ்வினைப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. எனினும் அங்கிருந்து எந்தவொரு  திருமேனியையும் கொணர்ந்ததாகச் சேக்கிழார் பெருமான் குறிக்கவில்லை. 

அவ்விதமே நடந்திருப்பினும், யானைமுக வள்ளலாகிய நம் கணபதி பிரசித்தி பெற்றிருந்த தலமாதலால், பரஞ்சோதியார் வாதாபியின் விநாயகத் திருமேனியொன்றினைச் செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்திருக்கக் கூடுமேயன்றி, அதுமுதல் தான் தமிழகத்தில் விநாயக வழிபாடு துவங்கிப் பரவியதாக, சிறுபிள்ளைத்தனமான பரப்புரையொன்று தொடர்ந்து நடந்தேறி வருவது நகைப்புக்குரியது. 

தமிழகப் பகுதியில் விநாயக வழிபாடு மிகமிகத் தொன்மையானது, 276 தேவாரத் திருத்தலங்களில் எண்ணிறந்த தலபுராண நிகழ்வுகள் விநாயக மூர்த்தியோடு தொடர்புடையன (சில உதாரணங்கள்: கச்சி அனேகதங்காவதம், திருவலிவலம்; திருவலஞ்சுழி).

No comments:

Post a Comment