11ஆம் திருமுறையின் 'மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை' - பாராயண வெண்பா பாடல்கள்

மகா கணபதியைப் போற்றும் இத்தனிப்பாடல் தொகுப்பினை அருளிச் செய்துள்ளவர் கபிலதேவ நாயனார். வெண்பா; அடுத்து ஒரு கட்டளைக் கலித்துறைப் பாடல் எனும் இவ்விரு மணிகளால் (அந்தாதி முறையில்) கோர்வையாகப் புனையப் பெறுவது 'திரு இரட்டை மணி மாலை' எனும் பிரபந்த வகையாகும். அவ்வகையில் இத்தொகுப்பில் 10 வெண்பாக்களும் 10 கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் இடம்பெறுகின்றன. அவற்றுள் விக்னேஸ்வர மூர்த்தியின் அளப்பரிய பெருமைகளைப் பறைசாற்றும் அமிழ்தினும் இனிதான, பாராயணம் புரிவதற்கும் மிக எளிதான வெண்பாக்களை மட்டும் இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,
-
(திருப்பாடல் 1)
திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்; செஞ்சொல்
பெருவாக்கும்; பீடும்பெருக்கும்; உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

(திருப்பாடல் 3):
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே; அப்பம்
இடிஅவலோடெள் உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை; ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

(திருப்பாடல் 5):
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்; விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்; தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து

(திருப்பாடல் 7):
யானை முகத்தான்; பொருவிடையான் சேய்;அழகார்
மான மணிவண்ணன் மாமருகன்; மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்;என்
உள்ளக் கருத்தின் உளன்

(திருப்பாடல் 9):
கணம்கொண்ட வல்வினைகள், கண்கொண்ட நெற்றிப்
பணம்கொண்ட பாந்தள் சடைமேல் மணம் கொண்ட
தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.

(திருப்பாடல் 11):
ஏத்தியே என்உள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொன் கழல்அங்கை
முக்கண் கடாயானை முன்

(திருப்பாடல் 13):
சரணுடையேன் என்று தலை தொட்டிருக்க
முரண்உடையேன் அல்லேன் நான்; முன்னம் திரள்நெடுங்கோட்(டு)
அண்டத்தான் அப்புறத்தான்; ஆனைமுகத்தான்; அமரர்
பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.

(திருப்பாடல் 15):
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க்(கு) இன்பம் செய்து
ஆட்கொண்டருளும் அரன்சேயை; வாட்கதிர்கொள்
காந்தார மார்பில் கமழ்தார்க் கணபதியை;
வேந்தா உடைத்தமரர் விண்.

(திருப்பாடல் 17):
பெருங்காதல் என்னோடு, பொன்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்

(திருப்பாடல் 19):
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்குதவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்

No comments:

Post a Comment