ஐந்தொழில் புரிந்தருளும் விக்னேஸ்வர மூர்த்தி (கந்தபுராண நுட்பங்கள்):

ஆதிப்பரம்பொருளான சிவபெருமானே 'படைத்தல்; காத்தல்; அழித்தல்; மறைத்தல்; அருளல்' எனும் ஐந்தொழில் முதல்வன் எனும் சத்தியத்தைக் கந்தபுராணத்தின் எண்ணிறந்த திருப்பாடல்கள் பறைசாற்றுகின்றன. 

சிவமூர்த்தி இத்தொழில்களை தானே நேரடியாகப் புரிவதில்லை, பிரமன்; ஸ்ரீமகாவிஷ்ணு; உருத்திரன்; மகேஸ்வரன்; சதாசிவன் ஆகிய உத்தமமான தெய்வங்களை முறையே அந்தந்த தொழில்களுக்கு நியமித்து; அவர்களுக்குள் உயிர்க்குயிராக தானே எழுந்தருளியிருந்து தொழிற்படுத்தி வரும் காரணப் பொருளாக விளங்கி அருளுகின்றார். 

மேற்குறித்துள்ள சிவபரத்துவ மேன்மையினைத் ததீசி முனிவரானவர் தட்சனுக்கு எடுத்துரைக்கும் பின்வரும் திருப்பாடலை இனிக் காண்போம், 
-
(தக்ஷ காண்டம் - ததீசிப் படலம்: திருப்பாடல் 44)
அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
பரமன் நின்மலன் ஏதுவுக்(கு)ஏதுவாம் பகவன்
ஒருவர் பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
இருமையாய்உறை பூரணன் யாவர்க்கும் ஈசன்

இனி பதிவின் மையக் கருத்திற்குள் செல்வோம், சிவபரம்பொருள் விநாயகப் பெருமானைத் தோற்றுவித்து அனுப்ப, மகா கணபதியானவர் யுத்த களத்தில் கஜமுகாசுரனை வென்று; பெருச்சாளி வடிவிலிருந்த அவன் மீது எழுந்தருளித் தோன்றுகின்றார். அசுரனால் கணக்கற்ற காலம் அவதியுற்றிருந்த தேவர்கள் யாவரும் பெருமகிழ்வுடன், விக்னேஸ்வர மூர்த்தியைச் சூழ்ந்து நின்று துதிக்கின்றனர், 

'விநாயகப் பெருமானே, ஐந்தொழிலைப் புரிந்து வரும் நீங்களே, எங்களின் தாங்கொணாத் துயரைப் போக்கியருள இவ்வித வடிவில் எழுந்தருளியுள்ளீர்கள்' என்று போற்றுகின்றனர் (தேவர்கள் கணேஸ்வர மூர்த்தியை 'என்றுமே நிலைத்துள்ள சிவமாகிய பரம்பொருளின் வடிவமாக உணர்ந்து போற்றியுள்ள' அற்புதத் திருப்பாடலிது), 
-
(தக்ஷ காண்டம் -  கயமுகன் உற்பத்திப் படலம்: திருப்பாடல் 255)
காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவும் 
தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
ஏப்படும் செய்கையென்ன எமதுளம் வெதும்பும் இன்னல்
நீப்பது கருதியன்றோ நீஅருள் வடிவம் கொண்டாய்

தேவர்கள் மேலும் தொடர்கின்றனர், 'விநாயகப் பெருமானே, உங்களிடமிருந்து பிறந்த ருக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களே உங்களை அறியஇயலாமல் திகைத்திருக்க, எங்கள் சிற்றறிவால் உங்களை அறிந்துவிடவும் கூடுமோ? ஆதலின் தாயும்; தந்தையுமாய் விளங்கியருளும் நீங்கள் எங்கள் புகழுரைகளைச் செவி சாய்த்து அருளல் வேண்டும்' என்று திருவடி தொழுகின்றனர் (குறிப்பு: உங்களிடமிருந்து பிறந்த வேதம் என்று போற்றுவதிலிருந்து, தேவர்கள் 'கணபதியை, ஐயத்திற்கு இடமின்றித் தனிப்பெரும் தெய்வமாகிய அம்மையப்பரின் அருள் வடிவமென்று உணர்ந்துள்ளனர்' என்பது தெளிவு). 
-
(தக்ஷ காண்டம் -  கயமுகன் உற்பத்திப் படலம்: திருப்பாடல் 256)
உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை
இன்னதென்(று) உணர்ந்ததில்லை யாமுனை அறிவதெங்ஙன்
அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர்
பன்னிய புகழ்ச்சியாவும் பரிவுடன் கேட்டி போலாம்

இந்நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னதான விநாயகப் பெருமானின் தோற்றப் பகுதியிலேயே நம் கச்சியப்ப சிவாச்சாரியார், 'அம்பிகை பாகத்து அண்ணலே விநாயகப் பெருமானாக மற்றுமொரு அருள் வடிவம் கொண்டருள்வதனை' பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 150)
மருளறப் புகலு(ம்) நான்மறைகளில் திகழு மெய்ப்
பொருளெனப்படும் அவன்; புவனமுற்றவர்கள் தம்
இருளறுத்(து)அவர் மனத்திடர் தவிர்த்தருள; ஓர்
அருள் உருத்தனை எடுத்(து) அவதரித்துளன் அவன்

No comments:

Post a Comment