தமிழ் மொழியை முதன் முதலில் அருளிய விநாயகப் பெருமான் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

இயல்; இசை; நாடகம் எனும் முத்தமிழின் முறைமைகள் முழுவதையும், எண்ணில் பலயுகங்களுக்கு முன்னரே, தன் திருக்கரங்களால் முதன் முதலில் எழுதி அருளியவர் பிரணவ முகத்து தெய்வமான நம் விநாயகப் பெருமானாவார். அருணகிரிப் பெருமான் 'கைத்தல நிறைகனி' திருப்புகழில் இவ்வரிய செய்தியினைப் பதிவு செய்து போற்றுகின்றார்,
-
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே

மிகமிக முற்பட்ட காலகட்டத்து நிகழ்வாதலால் 'முற்பட எழுதிய' என்று அருணகிரியார் குறிக்கின்றார். அதாவது, 'சிவபெருமான் அகத்தியருக்கு தமிழ் மொழியினை அருளு முன்னரே', 'அகத்தியர் தென்பகுதிக்கு வருகை புரிவதற்கு முன்னரே'. 

'முற்படு கிரிதனில் முற்பட எழுதிய' எனும் வரி 'மகாபாரதம் எழுதிய நிகழ்வையே குறிக்கின்றது' என்று தவறாகப் பொருள் கொள்வோரும் உண்டு. திருமுருக வாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சமயச் சான்றோர் யாவரும், இத்திருப்பாடலுக்கான தத்தமது விளக்கவுரைகளில் 'முத்தமிழின் முறைமைகளை விக்னேஸ்வர மூர்த்தி எழுதியதாகவே' தெளிவுறுத்தியுள்ளனர். 

மேலும் மகாபாரதம் எழுதப் பெற்றிருப்பதோ வடமொழியில், 'முத்தமிழ்' எனும் தெளிவான குறியீட்டினை வடமொழியென்று பொருள் காண்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

மற்றொருபுறம், 'விக்னேஸ்வர மூர்த்தி பாரதம் எழுதிய நிகழ்வினை' தம்முடைய திருப்பாடல்கள் தோறும் 'பாரதம்' என்று, இதிகாசப் பெயரைக் குறிப்பிட்டே பதிவு செய்து வரும் அருணகிரியாரின் பாடல் நடையினையும் உணர்ந்து தெளிவுறுவோம், 

('மாய வாடை' எனத் துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்),
பாயு மாமத தந்தி முகம்பெறும்
ஆதி பாரதமென்ற பெரும்கதை
பார மேருவிலன்று வரைந்தவன் இளையோனே!!!

('குகையில் நவ நாதரும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்), 
பகைகொள் துரியோதனன் பிறந்து
     படைபொருத பாரதம் தெரிந்து
          பரியதொரு கோடு கொண்டு சண்ட ...வரைமீதே
-
பழுதற வியாசன் அன்றியம்ப
     எழுதிய விநாயகன் சிவந்த
          பவள மதயானை பின்பு வந்த ...முருகோனே

முத்தமிழை முதன்முதலில் நமக்கருளிய, பன்னெடுங்காலமாய்த் தமிழர் உள்ளிட்ட பாரத தேசத்தினர் அனைவரின் வழிபடு தெய்வமாக விளங்கி வரும் நம் விக்னேஸ்வர மூர்த்தியை, வடநாட்டு தெய்வமென்று பிரிவினை பேசியுழல்வது மடமையினும் மடமையன்றோ!!!

வித்தக மருப்புடைய பெருமாளே:

சைவ மரபின் தோத்திரப் பாடல்களில் 'பெருமாளே' எனும் தனித்துவமான; இனிமையான சொல்லாடலைத் துவக்கி வைத்தவர் நம் தலைவரான அருணகிரிப் பெருமானேயாவார். அருணகிரியாரின் அவதாரக் காலத்திற்கு முன்னர் வரையிலும் சைவத் திருமுறைகளிலும்; பனுவல்களிலும் 'பெருமானே' எனும் சொற்பிரயோகமே பொதுவில் கைக்கொள்ளப் பெற்று வந்துள்ளது (சில உதாரணங்கள்: 'பெம்மான் இவனன்றே', 'பித்தா பிறைசூடி பெருமானே'). பெரிய புராணத் திருப்பாடலொன்றில், தியாகேச மூர்த்தியை 'தெய்வப் பெருமாள்' என்று அரிதாகக் குறிக்கின்றார் நம் சேக்கிழார் அடிகள்,
-
(பெரிய புராணம்: நமிநந்திஅடிகள் புராணம்: திருப்பாடல் 29)
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
   பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத்தனைய மணிகண்டர்
   வடிவேயாகிப் பெருகொளியால்
மொய்வைத்தமர்ந்த மேனியராம்
   பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்தஞ்சி அவனிமிசை
   விழுந்து பணிந்து களிசிறந்தார்

அருணகிரிப் பெருமான் எண்ணிலடங்கா திருப்பாடல்களில் ஆறுமுகக் கடவுளை 'பெருமாளே' என்று போற்றி மகிழ்கின்றார். மேலும் முழுமுதற் பொருளான நம் விநாயகப் பெருமானையும் 4 திருப்பாடல்களில் அவ்விதமே அகம்குளிரப் போற்றுகின்றார்.

விக்னேஸ்வர மூர்த்திக்கென அருளிச் செய்துள்ள 5 தனித் திருப்பாடல்களுள், பின்வரும் 4 திருப்பாடல்களில் 'பெருமாளே' என்று வேழ முகத்து இறைவனைப் பணிந்தேத்துகின்றார்,
-
1. 'கைத்தல நிறைகனி' என்று துவங்கும் திருப்பாடல் (அக்கண மணமருள் பெருமாளே)
-
2. 'பக்கரை விசித்திரமணி' என்று துவங்கும் திருப்பாடல் (வித்தக மருப்புடைய பெருமாளே)
-
3. 'உம்பர் தரு' என்று துவங்கும் திருப்பாடல் (ஐந்து கரத்தானைமுகப் பெருமாளே)
-
4. 'நினது திருவடி' என்று துவங்கும் திருப்பாடல் (எதிரும் நிசிசரரைப் பலியிட்டருள் பெருமாளே)
-
5. 'விடமடைசு வேலை' என்று துவங்கும் திருப்பாடல் (அறிவருளும் ஆனை முகவோனே)

தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
-
உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
     ஒண்கடலில் தேனமுதத்துணர்வூறி
-
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
     எந்தன் உயிர்க்காதரவுற்றருள்வாயே
-
தம்பி தனக்காக வனத்தணைவோனே
     தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
-
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
     ஐந்து கரத்தானைமுகப் பெருமாளே!!!

அடியவர்க்கு அருளும் ஞானத் தொப்பை விநாயகர்:

'இருநோய் மலத்தை' என்று துவங்கும் பொதுத் திருப்புகழில், 'பிறவியாகிய பெருநோயை அறுத்தருள்பவரும், துன்பங்கள் யாவையும் பொடிப்பொடியாகுமாறு செய்தருள்பவரும், தனக்கேஉரிய தனித்துவமான முறையில் அடியவர்களுக்குப் பேரருள் புரிபவரும், சிவஞானமேயான தொப்பையை உடையவருமாகிய விக்கின விநாயகப் பெருங்கடவுள் மகிழும் வேலாயுத தெய்வமே' என்று சிவகுமாரர்களைப் போற்றி மகிழ்கின்றார் நம் அருணகிரியார். 
-
கருநோய் அறுத்தெனது மிடிதூள் படுத்திவிடு
     கரிமா முகக்கடவுள் அடியார்கள்
-
கருதா வகைக்குவரம் அருள்ஞான தொப்பைமகிழ்
     கருணா கடப்பமலர் அணிவோனே!!!

எங்கள் விநாயகன் (விக்னேஸ்வர மூர்த்தியைப் போற்றும் திருவானைக்கா திருப்புகழ்):

'அஞ்சன வேல்விழி' என்று துவங்கும் ஆனைக்கா திருப்புகழில் 'பிரணவ முகத்துப் பெருங்கடவுளான மகாகணபதியை' அகம் குழைந்து போற்றிப் பரவுகின்றார் அருணகிரியார், 
-
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
     அங்குச பாசகர ப்ரசித்தன்ஒர்
          கொம்பன் மகோதரன் முக்கண்விக்ரம ...கணராஜன்
-
கும்பிடுவார் வினை பற்றறுப்பவன்
     எங்கள் விநாயகன் நக்கர்பெற்றருள்
          குன்றைய ரூபக கற்பகப்பிளை ...இளையோனே

இனி மேற்குறித்துள்ள திருப்பாடல் வரிகளை ஒவ்வொன்றாகச் சிந்தித்து மகிழ்வோம், 

(குஞ்சர மாமுகம்): யானையின் அழகிய திருமுகத்தைக் கொண்டருள்பவர்
-
(விக்கின ப்ரபு): விக்கினங்கள் அனைத்தையும் நீக்கியருளும் ஒப்புவமையற்ற இறைவர் 
-
(அங்குச பாசகர ப்ரசித்தன்): 'தன்னை அடக்குவோர் ஒருவரும் இலர் ' என்று உணர்த்தியருளும் விதமாக, யானையை அடக்கும் பாச அங்குசங்களைத் தன் திருக்கரங்களில் ஏந்தியருள்பவர்
-
(ஒர் கொம்பன்): ஒற்றைக் கொம்பினை உடைய மூர்த்தி,
-
(மகோதரன்) - அண்டசராசரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பெருவயிறினைக் கொண்டருள்பவர் 
-
(முக்கண்விக்ரம கணராஜன்): சிவபரம்பொருளைப் போலவே சூரிய; சந்திர; அக்கினியாகிய மூன்று திருக்கண்களைக் கொண்டருள்பவர். அதி பராக்கிரமர்.
-
(கும்பிடுவார் வினை பற்றறுப்பவன்): 'விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்' எனும் 11ஆம் திருமுறையின் சத்தியத்தினை அருணகிரியார் மீண்டுமொரு முறை தெளிவுறுத்துகின்றார்,
-
(எங்கள் விநாயகன்): எத்துனை இனிமையான சொற்கள், அடியவர் திருக்கூட்டத்தினர் அனைவரின் சார்பாகவும் 'எங்கள் விநாயகர்' என்று உரிமையோடு நெகிழ்ந்து போற்றுகின்றார் (தனக்கு மேலொரு தலைவன் இல்லாத தன்மையை 'விநாயகன்' எனும் திருநாமம் பறைசாற்றுகின்றது).
-
(நக்கர்பெற்றருள் குன்றைய ரூபக): பராசக்தியோடு கூடிய ஆதிப்பரம்பொருளான சிவபெருமான் ஈன்றருளிய, குன்றினைப் போன்ற பெருவடிவமுடையவர், 
-
(கற்பகப் பிளை) - அடியவர் வேண்டுவனவற்றைக் கற்பக மரம் போலும் அளித்தருள்பவர். கற்பக விநாயகக் கடவுளாக பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள திருமூர்த்தி.

அம்மையப்பரான சிவசக்தியரின் அருள் வடிவமே நம் விநாயகப் பெருமான், அம்மையப்பருக்கும் விக்னேஸ்வர மூர்த்திக்கும் யாதொரு பேதமுமில்லை. அம்பிகை பாகத்து அண்ணலான சிவபெருமான் ஆன்மாக்கள் மீதுள்ள அளப்பரிய கருணையால் விக்கின விநாயகப் பெருங்கடவுளாக மற்றுமொரு வடிவில் தோன்றித் திருவிளையாடல் புரிகின்றார்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்; கந்தர் அந்தாதி; கந்தர் அனுபூதி பாடல் தொகுப்புகள்:

(கந்தர் அலங்காரம் - விநாயக வணக்கத் திருப்பாடல்)

அடல்அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடப(ட) எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கடதட கும்பக களிற்றுக்(கு) இளைய களிற்றினையே!!!
-
(பொருள்):
'அருணை நகரிலுள்ள திருக்கோயிலில், வடவாயிலுக்கு அருகே, 'அவ்வாயிலின் தென்புறத்தில் எழுந்தருளியுள்ள, அடியவர்களின் 'தட பட' எனும் தலைக் குட்டுகளையும், இனிப்புடன் கூடிய நிவேதன உணவு வகைகளையும் ஏற்று அருள் புரியும் விநாயகப் பெருமானின் இளைய சகோதரனாகிய' வேலாயுதக் கடவுளைக் கண்டு கொண்டேன்' என்று விநாயக வணக்கப் பாடலில் கந்தவேளையும் இணைத்து நயம் பட போற்றுகின்றார் அருணகிரியார். 

(கந்தர் அந்தாதி - விநாயக வணக்கத் திருப்பாடல்):

வாரணத்தானை; அயனை; விண்ணோரை; மலர்க்கரத்து
வாரணத்தானை; மகத்துவென்றோன் மைந்தனைத்; துவச
வாரணத்தானைத் துணை நயந்தானை; வயலருணை;
வாரணத்தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே
-
(பொருள்): 
'ஐராவத யானையையுடைய இந்திரன்; நான்முகக் கடவுள்; ஏனைய விண்ணவர்கள்; மலர் போன்ற திருக்கரத்தில் பாஞ்சஜன்யம் எனும் சங்கினை ஏந்தியருளும் திருமால் ஆகியோரை (தட்ச யாக சாலையில் - வீரபத்திரரை ஏவி) வெற்றி கொண்டருளிய சிவபரம்பொருளின் மூத்த திருப்புதல்வரும், கோழிக்கொடியினை உடைய ஆறுமுகக் கடவுளை இளையோனாய்க் கொண்டருள்பவரும், வயல்கள் சூழ்ந்த அருணையம் பதியில் எழுந்தருளி இருப்பவரும், யானை முக கஜமுகாசுரனை வெற்றி கொண்டருளியவருமான விநாயகப் பெருமானின் திருவடிகளை வாழ்த்துகின்றேன்' என்று பணிந்தேத்துகின்றார் நம் அருணகிரியார். 

(கந்தர் அனுபூதி - விநாயக வணக்கத் திருப்பாடல்)

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்(கு) இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
-
(பொருள்)
'கல் போன்ற நெஞ்சத்தையும் பக்தியால் கசிந்துருக வைக்கும் தன்மையில், தன் திருவடிகளில் தஞ்சமடைந்தோர்க்குப் பேரருள் புரியும் குமாரக் கடவுளுக்கு, இலக்கண முறைமைகள் பிறழாது புனையவிருக்கும் இத்திருப்பாடல்கள் செம்மையாக அமைந்து சிறப்புற்றிட, ஐந்து திருக்கரங்களைக் கொண்டருளும் வேழ முகத்துக் கடவுளான விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிகின்றேன்' என்று போற்றிப் பரவுகின்றார் நம் அருணகிரிப் பெருமான்.