இயல்; இசை; நாடகம் எனும் முத்தமிழின் முறைமைகள் முழுவதையும், எண்ணில் பலயுகங்களுக்கு முன்னரே, தன் திருக்கரங்களால் முதன் முதலில் எழுதி அருளியவர் பிரணவ முகத்து தெய்வமான நம் விநாயகப் பெருமானாவார். அருணகிரிப் பெருமான் 'கைத்தல நிறைகனி' திருப்புகழில் இவ்வரிய செய்தியினைப் பதிவு செய்து போற்றுகின்றார்,
-
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
மிகமிக முற்பட்ட காலகட்டத்து நிகழ்வாதலால் 'முற்பட எழுதிய' என்று அருணகிரியார் குறிக்கின்றார். அதாவது, 'சிவபெருமான் அகத்தியருக்கு தமிழ் மொழியினை அருளு முன்னரே', 'அகத்தியர் தென்பகுதிக்கு வருகை புரிவதற்கு முன்னரே'.
'முற்படு கிரிதனில் முற்பட எழுதிய' எனும் வரி 'மகாபாரதம் எழுதிய நிகழ்வையே குறிக்கின்றது' என்று தவறாகப் பொருள் கொள்வோரும் உண்டு. திருமுருக வாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சமயச் சான்றோர் யாவரும், இத்திருப்பாடலுக்கான தத்தமது விளக்கவுரைகளில் 'முத்தமிழின் முறைமைகளை விக்னேஸ்வர மூர்த்தி எழுதியதாகவே' தெளிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மகாபாரதம் எழுதப் பெற்றிருப்பதோ வடமொழியில், 'முத்தமிழ்' எனும் தெளிவான குறியீட்டினை வடமொழியென்று பொருள் காண்பது எவ்விதத்திலும் பொருந்தாது.
மற்றொருபுறம், 'விக்னேஸ்வர மூர்த்தி பாரதம் எழுதிய நிகழ்வினை' தம்முடைய திருப்பாடல்கள் தோறும் 'பாரதம்' என்று, இதிகாசப் பெயரைக் குறிப்பிட்டே பதிவு செய்து வரும் அருணகிரியாரின் பாடல் நடையினையும் உணர்ந்து தெளிவுறுவோம்,
('மாய வாடை' எனத் துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்),
பாயு மாமத தந்தி முகம்பெறும்
ஆதி பாரதமென்ற பெரும்கதை
பார மேருவிலன்று வரைந்தவன் இளையோனே!!!
('குகையில் நவ நாதரும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்),
பகைகொள் துரியோதனன் பிறந்து
படைபொருத பாரதம் தெரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட ...வரைமீதே
-
பழுதற வியாசன் அன்றியம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவள மதயானை பின்பு வந்த ...முருகோனே
முத்தமிழை முதன்முதலில் நமக்கருளிய, பன்னெடுங்காலமாய்த் தமிழர் உள்ளிட்ட பாரத தேசத்தினர் அனைவரின் வழிபடு தெய்வமாக விளங்கி வரும் நம் விக்னேஸ்வர மூர்த்தியை, வடநாட்டு தெய்வமென்று பிரிவினை பேசியுழல்வது மடமையினும் மடமையன்றோ!!!
No comments:
Post a Comment