(கந்தர் அலங்காரம் - விநாயக வணக்கத் திருப்பாடல்)
அடல்அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்குவட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடப(ட) எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கடதட கும்பக களிற்றுக்(கு) இளைய களிற்றினையே!!!
-
(பொருள்):
'அருணை நகரிலுள்ள திருக்கோயிலில், வடவாயிலுக்கு அருகே, 'அவ்வாயிலின் தென்புறத்தில் எழுந்தருளியுள்ள, அடியவர்களின் 'தட பட' எனும் தலைக் குட்டுகளையும், இனிப்புடன் கூடிய நிவேதன உணவு வகைகளையும் ஏற்று அருள் புரியும் விநாயகப் பெருமானின் இளைய சகோதரனாகிய' வேலாயுதக் கடவுளைக் கண்டு கொண்டேன்' என்று விநாயக வணக்கப் பாடலில் கந்தவேளையும் இணைத்து நயம் பட போற்றுகின்றார் அருணகிரியார்.
(கந்தர் அந்தாதி - விநாயக வணக்கத் திருப்பாடல்):
வாரணத்தானை; அயனை; விண்ணோரை; மலர்க்கரத்துவாரணத்தானை; மகத்துவென்றோன் மைந்தனைத்; துவச
வாரணத்தானைத் துணை நயந்தானை; வயலருணை;
வாரணத்தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே
-
(பொருள்):
'ஐராவத யானையையுடைய இந்திரன்; நான்முகக் கடவுள்; ஏனைய விண்ணவர்கள்; மலர் போன்ற திருக்கரத்தில் பாஞ்சஜன்யம் எனும் சங்கினை ஏந்தியருளும் திருமால் ஆகியோரை (தட்ச யாக சாலையில் - வீரபத்திரரை ஏவி) வெற்றி கொண்டருளிய சிவபரம்பொருளின் மூத்த திருப்புதல்வரும், கோழிக்கொடியினை உடைய ஆறுமுகக் கடவுளை இளையோனாய்க் கொண்டருள்பவரும், வயல்கள் சூழ்ந்த அருணையம் பதியில் எழுந்தருளி இருப்பவரும், யானை முக கஜமுகாசுரனை வெற்றி கொண்டருளியவருமான விநாயகப் பெருமானின் திருவடிகளை வாழ்த்துகின்றேன்' என்று பணிந்தேத்துகின்றார் நம் அருணகிரியார்.
(கந்தர் அனுபூதி - விநாயக வணக்கத் திருப்பாடல்)
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்தஞ்சத்தருள் சண்முகனுக்(கு) இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
-
(பொருள்)
'கல் போன்ற நெஞ்சத்தையும் பக்தியால் கசிந்துருக வைக்கும் தன்மையில், தன் திருவடிகளில் தஞ்சமடைந்தோர்க்குப் பேரருள் புரியும் குமாரக் கடவுளுக்கு, இலக்கண முறைமைகள் பிறழாது புனையவிருக்கும் இத்திருப்பாடல்கள் செம்மையாக அமைந்து சிறப்புற்றிட, ஐந்து திருக்கரங்களைக் கொண்டருளும் வேழ முகத்துக் கடவுளான விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிகின்றேன்' என்று போற்றிப் பரவுகின்றார் நம் அருணகிரிப் பெருமான்.
No comments:
Post a Comment