திருஞானசம்பந்தர் தேவாரத்தில் விநாயகப் பெருமானின் திருஅவதாரம்:

விநாயகப் பெருமானின் தோற்றப் பகுதியினை விளக்கும் இரு கந்தபுராணத் திருப்பாடல்களை முதலில் சிந்தித்து, பின்னர் சம்பந்தப் பெருமானின் தேவாரத்திற்குள் பயணிப்போம். 

(1)
திருக்கயிலையிலுள்ள ஓவிய மண்டபத்தில், பிரணவ மந்திரம் பொறிக்கப் பெற்றிருந்த ஓவியமொன்றினை உமையன்னை பார்த்திருந்த சமயத்தில், சிவபரம்பொருளின் திருவருளால் அப்பிரணவமானது இரு யானைகளின் உருவு கொண்டு சங்கமிக்கின்றது,
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 142)
பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதியாகியே
ஓங்கிய தனியெழுத்(து) ஒன்றிரண்டதாய்த்
தூங்கு கைம்மலைகளில் தோன்றிற்றென்பவே

அச்சங்கமத்திலிருந்து, மூன்று திருக்கண்களோடும், ஐந்து திருக்கரங்களோடும், மும்மதங்கள் பொழியும் திருவாயுடனும், யானையின் திருமுகத்துடனும், சிவசக்தியரின் அருள்வடிவினராய் நம் விநாயகப் பெருமான் தோன்றி வெளிப்படுகின்றார், 

(2)
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 148)
அக்கணத்தாயிடை ஐங்கரத்தவன் அருள்
முக்கண் நால்வாயினான் மும்மதத்தாறு பாய்
மைக்கரும் களிறெனும் மாமுகத்தவன் மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன் வந்தருளினான்

(3)
இனி மேற்குறித்துள்ள நிகழ்வினை விவரிக்கும் சம்பந்த மூர்த்தியின் தேவாரத் திருப்பாடலைக் காண்போம், 
-
(திருவலிவலம் - சம்பந்தர் தேவாரம்: திருப்பாடல் 5)
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
-
'பிடி' எனும் பதம் பெண் யானையைக் குறிக்க வந்தது, திருவருளால் 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் ‘சக்தி தத்துவமான பெண் யானையாகவும்; சிவ தத்துவமான ஆண் யானையாகவும்’ உருவெடுத்துச் சங்கமிக்க, அந்த தத்துவ சங்கமத்தினின்றும், அடியவர்களின் இடர் களையும் பரம்பொருள் வடிவினராய் நம் கணபதி தோன்றுகின்றார் ('கரி' எனும் பதம் யானையைக் குறிக்க வந்தது). 

(4)
சம்பந்தப் பெருமான் 'பொங்கு வெண்புரி' என்று துவங்கும் மற்றுமொரு சீர்காழித் திருப்பதிகப் பாடலிலும், 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' என்று போற்றுகின்றார், 
-
(சீர்காழி - சம்பந்தர் தேவாரம்: திருப்பாடல் 3)
கரியின் மாமுகமுடைய கணபதி தாதை; பல்பூதம் 
திரிய இல்பலிக்கேகும் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநடமாடி
உரிய நாமங்களேத்தும் ஒலிபுனல் காழி நன்னகரே .

சைவ சமயம் 'இல்லது தோன்றாது; உள்ளது அழியாது' எனும் சற்காரிய வாதத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆதலின் 'நம் விநாயகப் பெருமான் முன்பில்லாது இருந்து பின்னர் புதிதாகத் தோன்றிய மூர்த்தியன்று, என்றுமே நிலைபெற்று விளங்கும்; அம்பிகையோடு கூடிய சிவமாகிய பரம்பொருளின் மற்றுமொரு அருள் வடிவமே' எனும் தெளிவான புரிதலோடு; விக்னேஸ்வர மூர்த்தியின் திருவடிகளை இச்சதுர்த்தித் திருநாளில் போற்றிப் பணிவோம்.

No comments:

Post a Comment