நாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் விநாயகப் பெருமானைப் பற்றிய அற்புத அற்புதமான குறிப்புகள்:

தேவார மூவரில், சம்பந்த மூர்த்தியும் சுந்தரரும் 'கணபதி' எனும் திருநாமத்தை மட்டுமே குறித்திருக்க, 'விநாயகன்' எனும் அற்புதத் திருநாமத்தைத் தம்முடைய திருப்பாடல்களில் பதிவு செய்துள்ளவர் நம் அப்பர் சுவாமிகள் மட்டுமே என்பதொரு அற்புதக் குறிப்பு.  

(1)
'கொடிமாட நீள்தெருவு' என்று துவங்கும் திருப்புறம்பயத் திருப்பதிகத்தில், 'விக்கின விநாயகன்' என்று குறிக்கின்றார்,
-
(திருப்புறம்பயம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 10)
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக்
    குமரனும் விக்கின விநாயகன்னும்
பூவாய பீடத்து மேல்அயன்னும்
    பூமியளந்தானும் போற்றிசைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடியாடிப்
    பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறி வண்டார்க்கப்
    புறம்பயம் நம்ஊரென்று போயினாரே

(2)
திருவாய்மூரில் சம்பந்தப் பெருமானுக்கும்; நாவுக்கரசு சுவாமிகளுக்கும் சிவபரம்பொருள் அம்மையப்பராய்; சிவகணங்கள் சூழ்ந்திருக்கும் திருக்கோலத்தில் திருக்காட்சி தந்தருள, அச்சமயத்தில் அப்பர் அடிகள் போற்றிசைத்த திருப்பதிகப் பாடலில் 'மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்' என்று பதிவு செய்கின்றார், 
-
(திருவாய்மூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 8 )
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
    போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க்கருளும் பரிசும் கண்டேன்
    பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
    மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்குமாறு கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

(3)
'மானேறு கரமுடைய வரதர் போலும்' என்று துவங்கும் திருவீழிமிழலைத் திருப்பதிகப் பாடலில், விநாயகப் பெருமான் கயமுகாசுரனை சம்ஹாரம் புரிந்தருளிய நிகழ்வினை 'கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்' என்று பதிவு செய்து போற்றுகின்றார்,
-
(திருவீழிமிழலை - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் 
    கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
    திசைமுகன்தன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்தி தலையறுத்தார் போலும்
    வியன் வீழிமிழலைஇடம் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும்
    அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

(4)
'சொல்லானைப் பொருளானை' என்று துவங்கும் திருநாரையூர் திருப்பதிகப் பாடலில், 'அறுமுகனோ(டு)  ஆனைமுகற்(கு) அப்பன் தன்னை' என்று நயம்பட குறித்துப் போற்றுகின்றார்,
-
(திருநாரையூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 7)
தக்கனது வேள்விகெடச் சாடினானைத்
    தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானைக்
    கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
    அறுமுகனோ(டு)ஆனைமுகற்(கு) அப்பன் தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

(5)
'உரித்தவன் காண்' என்று துவங்கும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகப் பாடலில், 'கடமா முகத்தினாற்குத் தாதை காண்' என்று போற்றுகின்றார்,
-
(திருக்கச்சி ஏகம்பம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 9)
முந்தைகாண் மூவரினும் முதலானான் காண்
    மூவிலைவேல் மூர்த்திகாண்; முருக வேட்குத்
தந்தைகாண்; தண்கடமா முகத்தினாற்குத்
    தாதைகாண்; தாழ்ந்தடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண்; சிந்தாத சித்தத்தார்க்குச்
    சிவனவன் காண்; செங்கண்மால் விடையொன்றேறும்
எந்தைகாண்; எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்; அவன்என் எண்ணத்தானே

(6)
'சுண்ண வெண் சந்தனச் சாந்தும்' என்று துவங்கும் திருவதிகைத் திருப்பதிகப் பாடலில் கணபதி எனும் திருநாமத்தைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு அற்புத நுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றார். 'ஒன்றன்பின் ஒன்றாக எதன் மீதாவது ஓயாத பற்று கொண்டுழல்வோரின் மனதில் எழுந்தருளி, அம்மாயையிலிருந்து அவர்களை விடுவித்து; வேட்கை தணிவித்து; முத்திநெறியினை நோக்கி இட்டுச் செல்பவர் கணபதி' என்று போற்றுகின்றார். 
-
'பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதியென்னும் களிறு' எனும் வரிகளுக்கு நேரடையாகப் பொருள் கொள்ளுதல் பிழை. சான்றோர்கள் இவ்வரிகளுக்கு அற்புதமான விளக்கங்களை அளித்து விநாயகப் பெருமானைப் போற்றியுள்ளனர். சிந்தித்து உய்வு பெறவேண்டிய திருப்பாடல் வரிகள் இவை, 
-
(திருவதிகை வீரட்டானம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 5)
பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதியென்னும் களிறும்
வலமேந்திரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலமார் கெடிலப் புனலும் உடையார்ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும்இல்லை அஞ்ச வருவதுமில்லை!!

No comments:

Post a Comment