விநாயக வணக்கத்துடன் துவங்கும் திருவிளையாடல் புராணம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

அகச் சந்தானக் குரவர்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் பரஞ்சோதி முனிவரும், திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரும் ஒருவரல்லர் எனும் முக்கியக் குறிப்பினை முதற்கண் உள்ளத்தில் இருத்துதல் வேண்டும். சந்தானக் குரவரான பரஞ்சோதி முனிவர் கால வரையறைகள் யாவையும் கடந்து முற்பட்டு விளங்குபவர், முன்னமே சிவமுத்திப் பேறு பெற்றுள்ள சிவபுண்ணிய சீலர், மெய்கண்ட தேவரின் குருநாதர். 

மற்றொருபுறம் திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரோ 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய அருளாளர். அவதாரத் தலம் நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தமிழ்; வடமொழி இலக்கண இலக்கியங்களில் பெரும்புலமை கொண்டிருந்த தகைமையாளர். மதுரையில் சிவதீக்ஷை பெற்றுத் துறவு வழியில் நின்ற பெருந்தகையார். சிவமுத்தித் தலம் 'திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள சேகல் (மடப்புரம்) எனும் சிற்றூர்'. இங்குள்ள பரஞ்ஜோதீஸ்வரர் ஆலயமே இப்பெருமகனாரின் ஜீவசமாதித் திருக்கோயிலாகும். 

ஒரு சமயம் சோமசுந்தரப் பரம்பொருளின் காதலியாராகவும், மதுரைப் பேரரசியாகவும், நால்வேதத் தலைவியாகவும் விளங்கியருளும் நம் மீனாட்சியம்மை பரஞ்சோதியாரின் கனவில் எழுந்தருளிச் சென்று, 'வடமொழி ஹாலாஸ்ய புராணத்தில் இடம்பெறும் சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்களைத் தொகுத்துத் தீந்தமிழில் புனையுமாறு கட்டளையிட்டு, 'சத்தியாய்' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிகின்றாள். 

இது மொழிபெயர்ப்பு நூலல்ல, பரஞ்சோதி முனிவர் மூல நூலிலுள்ள நிகழ்வுகளை மட்டும் உள்வாங்கிக் கொண்டு, வேதாகமங்கள்; சைவ சித்தாந்த சாத்திரங்கள்; பன்னிரு திருமுறைகள் இவைகளின் சாரப் பிழிவினை ஆங்காங்கே வெளிப்படுத்தி, அற்புதத்திலும் அற்புதமான ஆலவாய்ப் பரம்பொருளின் 64 திருவிளையாடல்களை 3363 திருப்பாடல்களாகப் புனைந்து அருளியுள்ளார். 

ஆலவாய்ப் பேரரசி அளித்தருளிய 'சத்தியாய்' எனும் முதற்சொல்லோடு, பிரணவ முகக் கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றியவாறு தன் புராணத்தினைத் துவக்குகின்றார் பரஞ்சோதி முனிவர்,
-
(திருவிளையாடல் புராணம் - விநாயக வணக்கத் திருப்பாடல்), 
சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பர 
முத்தியான முதலைத் துதிசெயச் 
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ 
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே 
-
(பொருள்):
'சத்தி; சிவம் எனும் வடிவினராய் விளங்கி, சிவமுத்திப் பேற்றினை அளித்தருளும் முதற்பொருளான சொக்கநாதப் பரம்பொருளின் திருவிளையாடல்களைப் புனைந்து போற்றுதற்கு, அற்புதக் கருத்துக்களோடு கூடிய தூய்மையான சொற்கள் அமைந்து வெளிப்பட, சித்தி விநாயகப் பெருமானின் பொன்போலும் திருவடிகளைப் பணிந்தேத்துவோம்' என்று போற்றுகின்றார் பரஞ்சோதி முனிவர்.

No comments:

Post a Comment