விநாயக வணக்கத்துடன் துவங்கும் குமரகுருபரரின் பாடல் தொகுப்புகள்:

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் குமரகுருபரர், அவதாரக் காலம் 63 ஆண்டுகள் (1625 - 1688). அவதாரத் தலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் தலத்திற்கு வடபால் அமைந்துள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதி. தன்னுடைய 6ஆம் வயதில் செந்தூர் வேலவனின் பேரருளால் பேச்சுத் திறன் பெற்று 'கந்தர் கலி வெண்பா' எனும் பாமாலையை அருளிச் செய்தவர். இவர் மதுரையில்; திருமலை நாயக்கரின் சபையில் அரங்கேற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல்களை, உலகீன்ற மீனாட்சி அன்னையே, சிறு பெண் குழந்தையொன்றின் வடிவில் எழுந்தருளி வந்து; நாயக்க மன்னரின் மடிமீது அமர்ந்திருந்து கேட்டருளினாள் எனில் குமரகுருபர சுவாமிகளின் தவச்சிறப்பினை என்னென்று போற்றுவது.      

தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரை ஞானசிரியராகக் கொண்டு அப்பெருமகனாருக்குத் திருவடித் தொண்டு புரிந்து வந்தார் சுவாமிகள். பின்னர் குருநாதரின் கட்டளையினை ஏற்றுக் காசித் திருத்தலத்தில் பன்னெடுங்காலம் திருத்தொண்டு புரிந்து வந்தார், இவரின் முத்தித் தலமும் காசியே. குருபூஜைத் திருநாள் வைகாசி மாதத் தேய்பிறையில் வரும் திருதியைத் திதி (அதாவது வைகாசி மாத பௌர்ணமியை அடுத்த 3ஆம் நாளில் வரும் திருதியைத் திதி) .

சுவாமிகள் அருளிச் செய்துள்ள 16 பாடல் தொகுப்புகளில், 'கயிலைக் கலம்பகம்; காசித் துண்டி விநாயகர் பதிகம்' எனும் இவ்விரு தொகுப்புகளும் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை. மீதமுள்ள 14 தொகுப்புகளில், 8 தொகுப்புகள் விநாயக வணக்கத் திருப்பாடலுடன் துவங்குகின்றன, அவற்றுள், பதிவின் நீளம் கருதி, 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' மற்றும் 'வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ்' எனும் இவ்விரு தொகுப்புகளையும் விடுத்து, ஏனைய 6 தொகுப்புகளின் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

1. கயிலைக் கலம்பகம் (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
2. காசிக் கலம்பகம் 
3. காசித் துண்டி விநாயகர் பதிகம்  (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
4. சகலகலாவல்லி மாலை 
5. சிதம்பர மும்மணிக் கோவை 
6. சிதம்பரச் செய்யுட் கோவை 
7. திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா 
8. திருவாரூர் நான்மணிமாலை
9. தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
10. நீதிநெறி விளக்கம் 
11. பண்டார மும்மணிக் கோவை
12. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை
13. மீனாட்சியம்மை குறம் 
14. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் 
15. மதுரைக் கலம்பகம் 
16. வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் 

(1)
(காசிக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி
நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற
காரார் வரையீன்ற கன்னிப்பிடி அளித்த
ஓரானை வந்தென் உளத்து
-
(இறுதி இரு வரிகளின் பொருள்)
வரையீன்ற (மலைமகளான) கன்னிப் பிடி ('பெண் யானை' போன்ற) உமையன்னை அளித்தருளிய விநாயகக் கடவுளை உள்ளத்தில் இருத்தித் தொழுவோம்

(2)
(சிதம்பர மும்மணிக்கோவை - விநாயக வணக்கப் பாடல்)
செம்மணிக்கோவைக் கதிர்சூழ் தில்லைச் சிற்றம்பலவன்
மும்மணிக்கோவைக்கு வந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ
அஞ்சக்கரக் கற்பகத்தார் இறைஞ்சும்; அஞ்சு
கஞ்சக்கரக் கற்பகம்

(3)
(திருவாரூர் நான்மணி மாலை - விநாயக வணக்கப் பாடல்)
நாடும் கமலேசர் நான்மணி மாலைக்கு மிகப்
பாடும் கவிதைநலம் பாலிக்கும் - வீடொன்ற
முப்போதகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும்
கைப் போதகத்தின் கழல்

(4)
(பண்டார மும்மணிக் கோவை - விநாயக வணக்கப் பாடல்)
எண்திசைக்கும் சூளாமணி மாசிலாமணிசீர்
கொண்டிசைக்கு(ம்) மும்மணிக் கோவைக்குக் கண்டிகைபொற்
பைந்நாகத்தான் அனத்தான் பாற்கடலான் போற்றஅருள்
கைந்நாகத்(து) ஆனனத்தான் காப்பு
-
தன்னுடைய குருநாதரான, தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரைப் போற்று முகமாக அருளிச் செய்துள்ள பாமாலையிது. 

(5)
(மதுரை மீனாட்சியம்மை குறம் - விநாயக வணக்கப் பாடல்)
கார்கொண்ட பொழில்மதுரைக் கர்ப்பூரவல்லி மணம் கமழும் தெய்வத்
தார்கொண்ட கருங்குழல் அங்கயற்கண் நாயகிகுறம் செந்தமிழால் பாட
வார்கொண்ட புகர்முகத்(து) ஐங்கரத்(து) ஒருகோட்(டு) இருசெவி மும்மதத்து நால்வாய்ப்
போர்கொண்ட கவுள்சிறுகண் சித்திவிநாயகன் துணைத்தாள் போற்றுவாமே.

(6)
(மதுரைக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
புந்தித் தடத்துப் புலக்களிறோடப் பிளிறுதொந்தித்
தந்திக்குத் தந்தை தமிழ்க்குத(வு) என்ப(து)என்; தண்ணளிதூய்
வந்திப்பதும்தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்துநின்று
சிந்திப்பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே

No comments:

Post a Comment