விநாயகப் பெருமான் எதனால் மகாவிஷ்ணுவின் சக்கரத்தை விழுங்கினார்? (காஞ்சிப் புராணத்தில் சிவஞான முனிவரின் அற்புத விளக்கம்):

விநாயகப் பெருமான் ஒருசமயம் திருமாலின் சக்கரத்தை விழுங்கித் திருவிளையாடல் புரிய, திருமால் செய்வதறியாது திகைத்து விகட நடனமொன்று புரிந்ததாகவும், அதுகண்டு விக்னேஸ்வர மூர்த்தி சிரிக்கையில் அச்சக்கரம் வெளிப்பட்டதாகவும் புராண நிகழ்வொன்றினைக் கேள்வியுற்றிருப்போம். மற்றொருபுறம் காஞ்சிப் புராணமோ 'திருமால் சார்பாக விஷ்வக்சேனரே விகட நடனம் ஆடிச் சக்கரத்தைப் பெற்றதாக' பதிவு செய்கின்றது. 

எதுவாயினும் 'விநாயகப் பெருமான் எதன் பொருட்டு சக்கரத்தை விழுங்கியிருப்பார்?' எனும் வினாவிற்கு, காஞ்சிப் புராணத்தை அருளியுள்ள சிவஞான முனிவர் பின்வரும் அற்புதத் திருப்பாடலில் விடை பகர்கின்றார்,
-
சிவபரம்பொருள் சலந்தரனை வதம் புரிவதற்குப் பயன்படுத்திய சக்கரத்தை, தன்னுடைய கண் விழியினையே மலராக்கிப் புரிந்த சிவபூசனையால் திருமால் பெறுகின்றார். எனினும் அச்சக்கரத்தில் சலந்தரனுடைய குருதியின் முடைநாற்றம் முற்றிலுமாய் அகலாதிருக்கின்றது. பின்னாளில் கருணைக் கடலான விக்னேஸ்வர மூர்த்தி அச்சக்கரத்தினை விழுங்குவதாகத் திருவிளையாடல் புரிந்து, விகட நடனத்தையே தனக்குரிய பூஜையாக ஏற்று, தன்னுள் பெருகும் மதநீரால் அவ்வாடையினைப் போக்கி; மணமேற்றி, அதனை மீண்டும் திருமாலுக்கு அளித்து அருள் புரிகின்றார். இத்தன்மையினால், 'வேண்டுவோரின் பழியினை நீக்கியருளும், தந்தையான சிவபரம்பொருளினும் மேம்பட்ட புகழ்பொருந்திய விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிவோம்' என்று போற்றுகின்றார் சிவஞான முனிவர்.    
-
(காஞ்சிபுராணம் - விகடசக்கர விநாயகக் கடவுள் வணக்கம்):
விழிமலர்ப் பூசனைஉஞற்றித் திருநெடுமால் பெறும்ஆழி மீளவாங்கி
வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி முடைநாற்றம் மாறுமாற்றால்
பொழிமதநீர் விரையேற்றி விகடநடப் பூசைகொண்டு புதிதா நல்கிப் 
பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த மதமாவைப் பணிதல் செய்வாம்

இனி விநாயக வணக்கத்துடன் துவங்கும் காஞ்சிப்புராணத்தின் முதல் திருப்பாடலையும் சிந்தித்து மகிழ்வோம்,
-
இருகவுள் துளை வாக்கு கார்க்கடங்கள் இங்குலிகக்
குரு நிறத்திழி தோற்றமுன் குலாய்த் தவழ்ந்தேறிப்
பரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலும் 
திருநிகர்த்த சீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம்
-
(சொற்பொருள்: கவுள் - கன்னம், வாக்கு(தல்) - வடித்தல், இங்குலிகம் - சிவப்பு, குரு - நிறம், நிறம் - மார்பு) 
-
(சுருக்கமான பொருள்):
'பொன்னிறமான சூரிய தேவனின் மார்பில்; கரிய நிறத்து மகனான யமனும்; மகளான காளிந்தியும் தவழ்வது போல், திருச்செவிகளினின்றும் பெருகும் கரிய மதநீர் பொன்னிறத் திருமேனியில் வழிந்தோடும் தன்மையினரான பிரணவ முகப் பெருங்கடவுளான விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சார்வோம்' என்று போற்றிப் பணிந்து, சிவபரத்துவம் பேணும் காஞ்சிப்புராண நூலினைத் துவங்குகின்றார் சிவஞான முனிவர்.

No comments:

Post a Comment