ஐந்தொழில் புரிந்தருளும் விக்னேஸ்வர மூர்த்தி (கந்தபுராண நுட்பங்கள்):

ஆதிப்பரம்பொருளான சிவபெருமானே 'படைத்தல்; காத்தல்; அழித்தல்; மறைத்தல்; அருளல்' எனும் ஐந்தொழில் முதல்வன் எனும் சத்தியத்தைக் கந்தபுராணத்தின் எண்ணிறந்த திருப்பாடல்கள் பறைசாற்றுகின்றன. 

சிவமூர்த்தி இத்தொழில்களை தானே நேரடியாகப் புரிவதில்லை, பிரமன்; ஸ்ரீமகாவிஷ்ணு; உருத்திரன்; மகேஸ்வரன்; சதாசிவன் ஆகிய உத்தமமான தெய்வங்களை முறையே அந்தந்த தொழில்களுக்கு நியமித்து; அவர்களுக்குள் உயிர்க்குயிராக தானே எழுந்தருளியிருந்து தொழிற்படுத்தி வரும் காரணப் பொருளாக விளங்கி அருளுகின்றார். 

மேற்குறித்துள்ள சிவபரத்துவ மேன்மையினைத் ததீசி முனிவரானவர் தட்சனுக்கு எடுத்துரைக்கும் பின்வரும் திருப்பாடலை இனிக் காண்போம், 
-
(தக்ஷ காண்டம் - ததீசிப் படலம்: திருப்பாடல் 44)
அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
பரமன் நின்மலன் ஏதுவுக்(கு)ஏதுவாம் பகவன்
ஒருவர் பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
இருமையாய்உறை பூரணன் யாவர்க்கும் ஈசன்

இனி பதிவின் மையக் கருத்திற்குள் செல்வோம், சிவபரம்பொருள் விநாயகப் பெருமானைத் தோற்றுவித்து அனுப்ப, மகா கணபதியானவர் யுத்த களத்தில் கஜமுகாசுரனை வென்று; பெருச்சாளி வடிவிலிருந்த அவன் மீது எழுந்தருளித் தோன்றுகின்றார். அசுரனால் கணக்கற்ற காலம் அவதியுற்றிருந்த தேவர்கள் யாவரும் பெருமகிழ்வுடன், விக்னேஸ்வர மூர்த்தியைச் சூழ்ந்து நின்று துதிக்கின்றனர், 

'விநாயகப் பெருமானே, ஐந்தொழிலைப் புரிந்து வரும் நீங்களே, எங்களின் தாங்கொணாத் துயரைப் போக்கியருள இவ்வித வடிவில் எழுந்தருளியுள்ளீர்கள்' என்று போற்றுகின்றனர் (தேவர்கள் கணேஸ்வர மூர்த்தியை 'என்றுமே நிலைத்துள்ள சிவமாகிய பரம்பொருளின் வடிவமாக உணர்ந்து போற்றியுள்ள' அற்புதத் திருப்பாடலிது), 
-
(தக்ஷ காண்டம் -  கயமுகன் உற்பத்திப் படலம்: திருப்பாடல் 255)
காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவும் 
தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
ஏப்படும் செய்கையென்ன எமதுளம் வெதும்பும் இன்னல்
நீப்பது கருதியன்றோ நீஅருள் வடிவம் கொண்டாய்

தேவர்கள் மேலும் தொடர்கின்றனர், 'விநாயகப் பெருமானே, உங்களிடமிருந்து பிறந்த ருக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களே உங்களை அறியஇயலாமல் திகைத்திருக்க, எங்கள் சிற்றறிவால் உங்களை அறிந்துவிடவும் கூடுமோ? ஆதலின் தாயும்; தந்தையுமாய் விளங்கியருளும் நீங்கள் எங்கள் புகழுரைகளைச் செவி சாய்த்து அருளல் வேண்டும்' என்று திருவடி தொழுகின்றனர் (குறிப்பு: உங்களிடமிருந்து பிறந்த வேதம் என்று போற்றுவதிலிருந்து, தேவர்கள் 'கணபதியை, ஐயத்திற்கு இடமின்றித் தனிப்பெரும் தெய்வமாகிய அம்மையப்பரின் அருள் வடிவமென்று உணர்ந்துள்ளனர்' என்பது தெளிவு). 
-
(தக்ஷ காண்டம் -  கயமுகன் உற்பத்திப் படலம்: திருப்பாடல் 256)
உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை
இன்னதென்(று) உணர்ந்ததில்லை யாமுனை அறிவதெங்ஙன்
அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர்
பன்னிய புகழ்ச்சியாவும் பரிவுடன் கேட்டி போலாம்

இந்நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னதான விநாயகப் பெருமானின் தோற்றப் பகுதியிலேயே நம் கச்சியப்ப சிவாச்சாரியார், 'அம்பிகை பாகத்து அண்ணலே விநாயகப் பெருமானாக மற்றுமொரு அருள் வடிவம் கொண்டருள்வதனை' பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 150)
மருளறப் புகலு(ம்) நான்மறைகளில் திகழு மெய்ப்
பொருளெனப்படும் அவன்; புவனமுற்றவர்கள் தம்
இருளறுத்(து)அவர் மனத்திடர் தவிர்த்தருள; ஓர்
அருள் உருத்தனை எடுத்(து) அவதரித்துளன் அவன்

பரஞ்சோதியார் வடநாட்டிலிருந்து கொணர்ந்த வாதாபி கணபதியால் விநாயக வழிபாடு பரவியதா? (போலிப் பரப்புரைகளும் முறையான விளக்கங்களும்):

பரஞ்சோதியார் எனும் நம் சிறுதொண்டர் வடநாட்டிலுள்ள வாதாபி நகர மன்னரொருவரைப் போரில் வென்று வந்த நிகழ்வினைப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. எனினும் அங்கிருந்து எந்தவொரு விக்கிரகத் திருமேனியையும் கொண்டு வந்ததாகச் சேக்கிழார் பெருமான் குறிக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, பரஞ்சோதியார் வடநாட்டிலிருந்து கணபதி விக்கிரகத்தைக் கொணர்ந்த காலகட்டமுதல் தான், தமிழகத்தில் விநாயக வழிபாடு துவங்கிப் பரவியதாக ஒரு தொடர்ப் பொய்ப் பரப்புரை நடந்தேறி வருகின்றது. அது குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

சிறுதொண்டர் வாழ்ந்திருந்த 7ஆம் நூற்றாண்டு காலகட்டத்திற்கு மிகமிக முற்பட்ட காலகட்டத்திலேயே, செங்காட்டங்குடி 'கணபதீஸ்வரம்' எனும் பெயராலேயே அறியப் பெற்று வந்துள்ளதையும், 'விநாயகப் பெருமானாலேயே இத்தலம் தோற்றுவிக்கப் பெற்றுள்ளது' என்பதையும் விவரிக்கும் பின்வரும் கந்தபுராணத் திருப்பாடல்களை இனிக் காண்போம், 

(1)
விநாயக மூர்த்தி கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்தருள, அந்த அசுரனனின் உடலிலிருந்து வெளிப்பட்ட குருதி அப்பகுதி முழுவதும் பரவ, அது முதல் அத்தலம் செங்காடு என்று அறியப் பெறுகின்றது,  
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 250)
ஏடவிழ் அலங்கல் திண்தோள் இபமுகத்து அவுணன் மார்பில் 
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர் பெற்றின்னும் காண்தக இருந்ததம்மா
-
(சொற்பொருள்: நீத்தம் - வெள்ளம், கான் - காடு, செய்ய காடு - செங்காடு)

(2)
பின்னர் விக்னேஸ்வர மூர்த்தி அச்செங்காட்டில் சிவலிங்கத் திருமேனியொன்றைப் பிரதிஷ்டை செய்து, பெரும் காதலுடன் சிவபரம்பொருளைப் பூசித்துப் பணிகின்றார். அதுமுதல் அத்தலம், 'கணபதீஸ்வரம்' என்று போற்றப் பெற்று, இன்றும் நம்மால் தரிசித்து மகிழக்கூடிய தன்மையில் சிறப்புடன் விளங்கி வருகின்றது,  
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 264)
மீண்டு செங்காட்டில் ஓர்சார் மேவி மெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியும் தாதை தன்னுருத் தாபித்தேத்திப்
பூண்ட பேரன்பில் பூசை புரிந்தனன் புவியுளோர்க்குக்
காண்தகும் அனைய தானம் கணபதீச்சரம் அதென்பார்

(3)
மேலும் சம்பந்த மூர்த்தி கணபதீஸ்வரம் எனும் இத்திருப்பெயரைக் கொண்டே தம்முடைய திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலையும் நிறைவு செய்கின்றார்,
-
(சம்பந்தர் தேவாரம்: கணபதீஸ்வரம் - திருப்பாடல் 1)
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங்குடிஅதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச்சரத்தானே

கணபதி பிரசித்தி பெற்றிருந்த தலமாதலால் நம் சிறுதொண்டர் வடநாட்டிலுள்ள விநாயகத் திருமேனியொன்றினைச் செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்திருக்கக் கூடும். எனினும் விநாயக வழிபாடு மிகமிகத் தொன்மையானது, 275 தேவாரத் திருத்தலங்களில் எண்ணிறந்த தலபுராண நிகழ்வுகள் விநாயக மூர்த்தியோடு தொடர்புடையன (சில உதாரணங்கள்: கச்சி அனேகதங்காவதம், திருவலிவலம்; திருவலஞ்சுழி). 

'தமிழ்க்குடியினர் இல்லங்களிலும்; உள்ளங்களிலும் பன்னெடுங்காலமாய் விநாயகப் பெருமானைப் போற்றியும் பூசித்தும் வந்துள்ளனர்' எனும் சத்தியத்தினை மேற்குறித்துள்ள அகச் சான்றுகள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், போலிப் பரப்புரைகளைப் புறம் தள்ளுவோம்.

விண்ணிலிருந்து தமிழகத்திற்கு வந்த காவிரி (தவறான திரைக்கதையும், உண்மை நிகழ்வும் - கந்தபுராண விளக்கங்கள்):

1972ஆம் வருடம் வெளிவந்த 'அகத்தியர்' திரைப்படத்தில், தன்னைப் பரிகசித்துப் பேசிய காவிரி தேவியை அகத்தியர் கமண்டலத்தில் அடைப்பதாகவும், பின்னர் காக்கையின் வடிவில் தோன்றும் விநாயகப் பெருமானால் அந்நதி வெளிப்படுவதாகவும் காட்சி அமைக்கப் பெற்றிருக்கும். இந்நிகழ்வுகளுள் விநாயக மூர்த்தியால் காவிரி வெளிப்பட்டது மட்டுமே உண்மை வரலாறு, அதற்கு முந்தைய நிகழ்வுகள் யாவும் திரைக்கதை சுவாரஸ்யத்திற்காகப் புனையப் பெற்றவையே. இனி இந்நிகழ்வுகள் குறித்த மெய்மையான வரலாற்றினை கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத் திருப்பாடல்கள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், 

அகத்திய மாமுனி சிவபரம்பொருளின் கட்டளைப்படி தென்திசை நோக்கிப் பயணித்துச் செல்லுகையில், தேவர்கள் 'விந்திய மலையின் ஆணவத்தை அடக்கி அருள் புரியுமாறு' அகத்தியரை வேண்டிப் பணிகின்றனர். குறுமுனியும் இதுகுறித்துச் சிவபெருமானின் திருவருளை வேண்டித் தொழ, முக்கண் முதல்வர் திருக்காட்சி அளித்து ஆசி கூறியருள் புரிகின்றார். அச்சமயத்தில் 'தென்திசையில் அனுஷ்டானம் மற்றும் வழிபாடு புரிதற் பொருட்டு தீர்த்தமொன்றினைத் தந்தருள வேண்டும்' என்று அகத்தியர் விண்ணப்பிக்க, சிவமூர்த்தி காவிரி தேவியை அகத்தியருடன் செல்லுமாறு கட்டளையிட்டு அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
தீது நீங்கிய தென் திசைக்கு ஏகிய
கோதிலாத குறுமுனி தன்னொடும்
போதல் வேண்டும் பொருபுனல் காவிரி
மாது நீஎன மற்றவள் கூறுவாள்

பின்னர் சிவபெருமான் அகத்தியரிடம், 'இனி இக்காவிரியை உன்னுடைய கமண்டலத்தில் நிறைத்துச் செல்வாய்' என்று அருள் புரிகின்றார், 
-
(கந்த புராணம் - அசுர காண்டம் - அகத்தியப் படலம்):
நீடு காவிரி நீத்தத்தை நீ இனிக்
கோடி உன் பெரும் குண்டிகைப் பால்என
நாடி அத்திறம் செய்தலும் நன்முனி
மாடு சேர்ந்தனள் மாநதி என்பவே
-
மேற்குறித்துள்ள திருப்பாடல்களால் 'அகத்திய மாமுனி தென்திசைக்கு வருவதன் முன்னமே காவிரி நதியானது அவருடைய கமண்டலத்தில் விளங்கியிருந்தது' என்பதும், 'காவிரி தேவி பரிகசித்து அகத்தியர் கமண்டலத்தில் அடைத்ததாகக் கூறுவது புனைந்துரையே' என்பதும் தெளிவாகின்றது. 

பின்னர் அகத்தியர் வில்லவன் வாதாபி எனும் அசுரர்களை அழித்தொழித்து அதிலுண்டான தோஷ நிவர்த்திக்காக கொங்கு தேசத்தில் சிவவழிபாடு புரிந்து வருகின்றார். சரி நம் விநாயகப் பெருமான் இந்நிகழ்விற்குள் எங்கு வருகின்றார் எனில், சூரபன்மனின் கொடுமையினால் இந்திரன் சீர்காழித் தலத்தில் மறைந்து வாழ்ந்து வருகின்றான்; சிவவழிபாட்டிற்குப் போதுமான நீர்நிலைகள் இல்லையாதலின், நாரதரின் உபாயப்படி விநாயகப் பெருமானைப் போற்றித் துதித்துப் பணிகின்றான்.

இந்திரனின் முன் தோன்றும் வேழ முகத்து இறைவரான கணபதி, இந்திரனின் வேண்டுகோளினை ஏற்றுக் காவிரியை இந்நிலப்பிறப்பில் பாயுமாறு செய்வதாக அருள் புரிகின்றார்.  
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அன்னவன் தனது மாட்டோர் அணி கமண்டலத்தினூடே
பொன்னி என்றுரைக்கும் தீர்த்தம் பொருந்தியே இருந்ததெந்தாய்
நன்னதி அதனை நீபோய் ஞாலமேல் கவிழ்த்து விட்டால்
இன்னதோர் வனத்தின் நண்ணும் என்குறை தீருமென்றான்

காக்கை வடிவில் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்துக் காவிரியை வெளிப்படச் செய்கின்றார். பின்னர் சிறுவனொருவனின் வடிவில் தோன்றி, கோபத்துடன் விரட்டி வரும் அகத்தியருக்கு அங்குமிங்கும் போக்குக் காட்டித் திருவிளையாடல் புரிந்துப் பின்னர் தன் சுய திருக்கோலத்தைக் காட்டியருள் புரிகின்றார். அகத்தியர் தன் தவுறுணர்ந்துத் தன் கரங்களாலேயே தலையில் குட்டிக் கொண்டு, தாரகப் பிரம்மமான விநாயகப் பெருமானிடம் பிழை பொறுக்குமாறு வேண்டிப் பணிகின்றார், யானை முக வள்ளலும் 'வருந்தற்க' என்று அருள் புரிகின்றார்,
-
(கந்தபுராணம் - அசுர காண்டம்: காவிரி நீங்கு படலம்):
அந்தண குமரன் என்றே ஐயநின் சிரமேல் தாக்கச்
சிந்தனை புரிந்தேன் யாதும் தெளிவிலேன் அதற்குத் தீர்வு
முந்தினன் இயற்றுகின்றேன் என்றலும் முறுவல் செய்து
தந்தியின் முகத்து வள்ளல் அலமரல் தவிர்தி என்றான்

விநாயகப் பெருமானை நெருங்காத சிவசாபம் (திருவிளையாடல் புராணம் விவரிக்கும் அற்புத நிகழ்வு):

 
பரஞ்சோதி முனிவர் அருளியுள்ள திருவிளையாடல் புராணத்தின் 'வலை வீசின படலம்', 'இப்படியும் நடக்குமோ?' என்று நம்மை வியப்பிலாழ்த்தும் ஒரு நிகழ்வினை விவரிக்கின்றது. 'இது சிவபரம்பொருளின் திருவுள்ளக் குறிப்பின் வழி நிகழுமொரு தெய்வ நாடகமே' எனும் தெளிவான புரிதலோடு நிகழ்விற்குள் பயணிப்போம்.

ஆலவாய்ப் பரம்பொருளான சோமசுந்தரக் கடவுள் மீனாட்சியம்மையோடு தனியொரு இடத்தில் எழுந்தருளியிருந்தவாறு, அம்பிகைக்கு ரிக்; யஜுர்; சாம; அதர்வண மறைப்பொருளை உபதேசித்துக் கொண்டிருக்கின்றார். எக்காரணத்தினாலோ நம் அம்மையால் இறைவரின் விளக்கங்களை மனஒருமையோடு கேட்க இயலாது போகின்றது. 

அது கண்டு துணுக்குறும் வேத முதல்வர், 'தேவி, மனம் ஒருமையுறாது நம் உரையினைக் கேட்டமையால் மீனவர் குல மகளாகத் தோன்றக் கடவாய்' என்று பணிக்கின்றார். 'இறைவரைப் பிரிவதோ?' என்று அம்மை துடிதுடித்துப் பதற, ஆலவாய் அண்ணலும், 'அவ்வாறு நீ வளர்ந்து வருகையில் நாமே வந்து தடுத்தாட்கொண்டு மணம் புரிவோம்' என்று அருளிச் செய்கின்றார். 

(1)
நடந்தேறிய நிகழ்வுகளை அறியப் பெறும் சிவகுமாரர்கள் புயல் போல் அங்கு எழுந்தருளி வருகின்றனர். 'அம்மைக்குச் சாபமோ?' என்று சினமுறும் விக்னேஸ்வர மூர்த்தி, 'இவற்றாலன்றோ இந்நிலை எய்தியது' என்று இறைவருக்கு அருகிலிருந்த நான்மறைச் சுவடிகளை, உணவுக் கவளம் போன்று அள்ளியெடுத்துத் தன் நெடிய திருக்கரத்தினால் கடலில் வீசுகின்றார். 
-
(வலை வீசின படலம் - திருப்பாடல் 7)
அன்னது தெரிந்து நால்வாய் ஐயங்கரக் கடவுள்; தாதை
முன்னர் வந்(து); இதனாலன்றோ மூண்ட(து) இச்செய்தியெல்லாம் 
என்ன ஈர்ங் கவளம் போல் ஆங்கிருந்த புத்தகங்கள்
                                                            எல்லாம்
தன்னெடும் கரத்தால் வாரி எறிந்தனன் சலதி மீதால்

(2)
நம் அறுமுக தெய்வமோ தமையனைக் காட்டிலும் ஒருபடி மேலே சென்று, இறைவரின் திருக்கரங்களினின்றும் சிவஞானபோதமாகிய சுவடிகளைப் பற்றிப் பறித்துக் கடலினில் எறிய, இறைவரின் சினம் முதற்கண் நந்திதேவரின் மீது பாய்கின்றது. 
-
(வலை வீசின படலம் - திருப்பாடல் 8 )
வரைபக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில்
உரைபெறு போதநுலை ஒல்லெனப் பறித்து வல்லே
திரைபுக எறிந்தானாகச் செல்வநான் மாடக்கூடல்
நரைவிடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா
-
'ஞானோபதேச காலம் அறியாது நம் குமாரர்களை உள்ளே விடுத்தமையால், சுறா மீன் வடிவில் கடலில் உழல்வாயாக' என்று விதிக்கின்றார். 

(3)
பின்னர் இறைவரின் திருக்கண் நோக்கு குமாரர்களின் பால் திரும்புகின்றது. வேழ முகத்து குமாரனான விநாயகனைச் சபித்தால் அது தன்னையே சபித்தது போலாகும் தன்மையினைத் திருவுள்ளத்து எண்ணி, வேலவனிடம் 'நீ மதுரையில் வணிகர் குலத்தில் ஊமையாகத் தோன்றக் கடவாய்' என்று இறைவர் விதிப்பதாகப் பரஞ்சோதி முனிவர் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார். ஆதிப்பரம்பொருளான சிவபெருமானுக்கும், அவர்தம் ஆக்ஞையால் யானைமுக வடிவம் தாங்கியருளிய விநாயகப் பெருமானுக்குமான பேதமின்மையை இந்நிகழ்வு அற்புதமாய்ப் பறைசாற்றுகின்றது. 
-
(வலை வீசின படலம் - திருப்பாடல் 10)
வெருவரு செலவின் வேழ முகத்தனை விதித்த சாபப்
பெருவலி தன்னைச் சாரும் பெற்றியால் சாபம் கூறான்
அருவரை நெஞ்சு போழ்ந்த வள்ளிலை வடிவேல் செங்கை 
முருகனை வணிகர் தம்மின் மூங்கையாகென்றான் இப்பால்

மற்றொருபுறம் யானைமுக தெய்வம்; ஆறுமுக தெய்வம் எனும் இவ்விரு மூர்த்திகளும் அம்மையப்பரின் அருள் வடிவங்களே எனும் அபேத சத்தியத்தைக் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் பல்வேறு திருப்பாடல்களில் பதிவு செய்கின்றது.


மகாபாரதம் எழுதிய முழுமுதற் கடவுள் (நிகழ்வும் நுட்பங்களும்):

வேதவியாசர் 5ஆம் வேதமெனப் போற்றப் பெறும் மாபாரதத்தினை இயற்ற விழைகின்றார். எண்ணிலடங்கா இதிகாச நிகழ்வுகளை மனதிற்குள் புனைந்தவாறே அவற்றினைச் சுவடிகளிலும் பதிவு செய்வதென்பது மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயல் என்றுணர்ந்து, விநாயகப் பெருமானின் திருவருளை வேண்டித் தொழுகின்றார். 

அடியவர்க்கு எளியரான விக்னேஸ்வர மூர்த்தி திருக்காட்சி தந்தருள, வியாச ரிஷி 'அடியவன் புனையும் மாபாரதத் திருப்பாடல்களை நீங்களே எழுதித் தந்தருள வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்றார். வேழமுகக் கடவுளும் 'வியாசனே! நாம் எழுதும் வேகத்திற்குத் தக்கவாறு நீ பாடல்களைக் கூறுவதாயின் எழுதுவோம்' எனும்  நிபந்தனையொன்றினை விதிக்கின்றார். வியாசர் சிறிது திகைத்து, (இடையிடையே சிறிது அவகாசம் பெறும் பொருட்டு) 'பெருமானே! அவ்விதமே கூறி வருவேன், எனினும் பாடல்களின் பொருளுணர்ந்த பின்னரே நீங்கள் எழுதுதல் வேண்டும்' என்று விண்ணப்பிக்க, ஏகதந்த மூர்த்தியும் புன்முறுவலோடு உடன்படுகின்றார். 

இவ்விடத்திலொரு நுட்பம், நம் உயிர்க்குயிராக எழுந்தருளி இருந்து நம்மைத் தொழிற்படுத்துவது இறைவனே, வெளிப்படும் ஞானம் மற்றும் சொற்கள் ஒவ்வொன்றும் இறைவனின் அருட்கொடை. 'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்' என்பார் நம் அப்பர் சுவாமிகள். 'இறைவன் அறிவித்தாலன்றி அறிய இயலாத தன்மையைக் கொண்டவை ஆன்மாக்கள்'. இவ்விதமிருக்க, பரம்பொருள் வடிவினரான விநாயகப் பெருமானிடத்திலேயே, (கணநேர மாயையினால்) 'பொருளுணர்ந்த பின்னரே எழுதுதல் வேண்டும்' என்று வியாசர் பதில் நிபந்தனை விதிக்கின்றார். கருணைப் பெருவெள்ளமான கணேச மூர்த்தி அக்குற்றத்தையும் குணமாகக் கொண்டு அருள் புரிகின்றார்.    

வியாசர் திருப்பாடல்களை விரைவாக மனதிற்குள் புனைந்தவாறே கூறத் துவங்க பிள்ளையாரும் அதனை எழுதி வருகின்றார். நடுநடுவே வியாசர் இருபொருள் தோன்றும் விதமாக ஒரு திருப்பாடலைக் கூறுவார், பிரணவத்திற்கே பொருளாக விளங்கியருளும் நம் விநாயகப் பெருமானும், (வியாசருக்குச் சிறிது அவகாசம் அளித்தருளும் பொருட்டு) அப்பாடலின் பொருளினைச் சிந்திப்பவர் போல் கணநேரம் பாவனை புரிந்து பின்னர் எழுதுவார். அதற்குள்ளாக வியாச ரிஷி அடுத்த 5000 திருப்பாடல்களை மனதினுள் முறைப்படுத்திக் கொள்வார்.

இவ்வகையில் மகா கணபதி எழுதியருளியவை 60 லட்சம் சுலோகங்கள், அவற்றுள் 30 லட்சம் சுலோகங்கள் தேவலோகத்திலும், 15 லட்சம் யட்ச உலகத்திலும், 14 லட்சம் அசுர உலகத்திலும் தங்கி விடுகின்றது, நமக்கின்று கிடைத்திருப்பவை 1 லட்சம் சுலோகங்களே!!

நம் அருணகிரிப் பெருமான் திருச்செந்தூர் திருப்புகழில் இவ்வற்புத நிகழ்வினைப் போற்றுகின்றார்,
-
பாயு மாமத தந்தி முகம்பெறும்
ஆதி பாரதமென்ற பெருங்கதை
பார மேருவிலன்று வரைந்தவன் இளையோனே!!!