விநாயக வணக்கத்துடன் துவங்கும் (5000 ஆண்டுகள் பழமையான) திருமந்திரம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

பன்னிரு சைவத் திருமுறைகளிலும், வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றியுள்ள எண்ணிறந்த அருளாளர்களின் திருப்பாடல்களிலும் விநாயகப் பெருமானைப் போற்றும் குறிப்புகள் இடம்பெற்றிருப்பினும், '7ஆம் நூற்றாண்டிற்கு முன்னதான காலகட்டத்தில் விநாயக வழிபாடு சிறப்புற்று விளங்கியிருக்கவில்லை' எனும் பொய்ப் பிரச்சாரத்தை நிறுவுவதிலேயே ஒரு சாராருக்கு அதீத ஆர்வம். இனி பதிவிற்குள் செல்வோம், 

7ஆம் நூற்றாண்டு அருளாளரான சுந்தர மூர்த்தி நாயனார் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' என்று  போற்றியிருப்பதனால் திருமூல நாயனார் சுந்தரருக்கு முற்பட்ட காலத்தவர் என்பது தெளிவு. 'எவ்வளவு ஆண்டுகள் முற்பட்டவர்?' எனும் வினாவிற்கான விடையினைப் பின்வரும் பெரிய புராணத் திருப்பாடல்கள் வாயிலாகச் சிந்தித்துத் தெளிவுறுவோம், 

(1)
'இப்புவியிலுள்ளோர் பிறவி நோயினின்றும் விடுபட்டு உய்வு பெறும் பொருட்டு, ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம், சரியை; கிரியை; யோகம்; ஞானமாகிய 4 மலர்களைக் கொண்டு, பரம்பொருளான சிவபெருமானைப் போற்றும் திருமந்திர மாலையினை அருளிச் செய்துள்ளார் திருமூலர்' என்று தெய்வச் சேக்கிழார் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 26):
ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத்தோருய்ய
ஞானமுதல் நான்குமலர் நல்திருமந்திர மாலை
பான்மைமுறை ஓராண்டுக்கொன்றாகப் பரம்பொருளாம்
ஏனஎயிறணிந்தாரை ஒன்றவன் தானென எடுத்து!!!

(2)
மேலும் பின்வரும் திருப்பாடலில், '(சிவயோகப் பயிற்சியினால்) மூவாயிரம் ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்திருந்து, (ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம்) 3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திர சாத்திர லை அருளிச் செய்துள்ளார் திருமூலர்' என்றும் சேக்கிழார் பெருமான் பதிவு செய்கின்றார், 
-
(பெரிய புராணம் - திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 27):
முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னி மதியணிந்தார் தம் திருவருளால் திருக்கயிலை
தன்னில்அணைந்து ஒருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

ஆதலின் திருமூலர் '7ஆம் நூற்றாண்டிற்கும் 3000 ஆண்டுகள் முற்பட்ட அருளாளர் (அதாவது இன்றிலிருந்து சுமார் 4400 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்)' என்பது தெளிவு. 'கலியுகத்தின் துவக்க காலகட்டமே (அதாவது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர்) திருமூல நாயனாரின் அவதாரக் காலம்' என்பது ஆய்வாளர்களின் இறுதிக் கருத்து.

சிவபரம்பொருள் அருளிச் செய்துள்ள ருக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களின் சாரத்தினைத் தமிழாக்கித் தருவதே திருமூலரின் அவதார நோக்கம் ('என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்பது திருமந்திர வாக்கு). 'சிவயோகியான நம் திருமூலர் பிரணவமுகப் பெருங்கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றிய பின்னரே தன்னுடைய சாத்திர நூலை அருளிச் செய்துள்ளார்' எனில் தமிழர் மரபிலுள்ள விநாயக வழிபாட்டின் தொன்மை நன்கு விளங்குமன்றோ!
-
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

திருஞானசம்பந்தர் தேவாரத்தில் விநாயகப் பெருமானின் திருஅவதாரம்:

விநாயகப் பெருமானின் தோற்றப் பகுதியினை விளக்கும் இரு கந்தபுராணத் திருப்பாடல்களை முதலில் சிந்தித்து, பின்னர் சம்பந்தப் பெருமானின் தேவாரத்திற்குள் பயணிப்போம். 

(1)
திருக்கயிலையிலுள்ள ஓவிய மண்டபத்தில், பிரணவ மந்திரம் பொறிக்கப் பெற்றிருந்த ஓவியமொன்றினை உமையன்னை பார்த்திருந்த சமயத்தில், சிவபரம்பொருளின் திருவருளால் அப்பிரணவமானது இரு யானைகளின் உருவு கொண்டு சங்கமிக்கின்றது,
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 142)
பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால்
ஆங்கதன் நடுவணில் ஆதியாகியே
ஓங்கிய தனியெழுத்(து) ஒன்றிரண்டதாய்த்
தூங்கு கைம்மலைகளில் தோன்றிற்றென்பவே

அச்சங்கமத்திலிருந்து, மூன்று திருக்கண்களோடும், ஐந்து திருக்கரங்களோடும், மும்மதங்கள் பொழியும் திருவாயுடனும், யானையின் திருமுகத்துடனும், சிவசக்தியரின் அருள்வடிவினராய் நம் விநாயகப் பெருமான் தோன்றி வெளிப்படுகின்றார், 

(2)
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 148)
அக்கணத்தாயிடை ஐங்கரத்தவன் அருள்
முக்கண் நால்வாயினான் மும்மதத்தாறு பாய்
மைக்கரும் களிறெனும் மாமுகத்தவன் மதிச்
செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன் வந்தருளினான்

(3)
இனி மேற்குறித்துள்ள நிகழ்வினை விவரிக்கும் சம்பந்த மூர்த்தியின் தேவாரத் திருப்பாடலைக் காண்போம், 
-
(திருவலிவலம் - சம்பந்தர் தேவாரம்: திருப்பாடல் 5)
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
-
'பிடி' எனும் பதம் பெண் யானையைக் குறிக்க வந்தது, திருவருளால் 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் ‘சக்தி தத்துவமான பெண் யானையாகவும்; சிவ தத்துவமான ஆண் யானையாகவும்’ உருவெடுத்துச் சங்கமிக்க, அந்த தத்துவ சங்கமத்தினின்றும், அடியவர்களின் இடர் களையும் பரம்பொருள் வடிவினராய் நம் கணபதி தோன்றுகின்றார் ('கரி' எனும் பதம் யானையைக் குறிக்க வந்தது). 

(4)
சம்பந்தப் பெருமான் 'பொங்கு வெண்புரி' என்று துவங்கும் மற்றுமொரு சீர்காழித் திருப்பதிகப் பாடலிலும், 'கரியின் மாமுகமுடைய கணபதி தாதை' என்று போற்றுகின்றார், 
-
(சீர்காழி - சம்பந்தர் தேவாரம்: திருப்பாடல் 3)
கரியின் மாமுகமுடைய கணபதி தாதை; பல்பூதம் 
திரிய இல்பலிக்கேகும் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநடமாடி
உரிய நாமங்களேத்தும் ஒலிபுனல் காழி நன்னகரே .

சைவ சமயம் 'இல்லது தோன்றாது; உள்ளது அழியாது' எனும் சற்காரிய வாதத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆதலின் 'நம் விநாயகப் பெருமான் முன்பில்லாது இருந்து பின்னர் புதிதாகத் தோன்றிய மூர்த்தியன்று, என்றுமே நிலைபெற்று விளங்கும்; அம்பிகையோடு கூடிய சிவமாகிய பரம்பொருளின் மற்றுமொரு அருள் வடிவமே' எனும் தெளிவான புரிதலோடு; விக்னேஸ்வர மூர்த்தியின் திருவடிகளை இச்சதுர்த்தித் திருநாளில் போற்றிப் பணிவோம்.

நாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் விநாயகப் பெருமானைப் பற்றிய அற்புத அற்புதமான குறிப்புகள்:

தேவார மூவரில், சம்பந்த மூர்த்தியும் சுந்தரரும் 'கணபதி' எனும் திருநாமத்தை மட்டுமே குறித்திருக்க, 'விநாயகன்' எனும் அற்புதத் திருநாமத்தைத் தம்முடைய திருப்பாடல்களில் பதிவு செய்துள்ளவர் நம் அப்பர் சுவாமிகள் மட்டுமே என்பதொரு அற்புதக் குறிப்பு.  

(1)
'கொடிமாட நீள்தெருவு' என்று துவங்கும் திருப்புறம்பயத் திருப்பதிகத்தில், 'விக்கின விநாயகன்' என்று குறிக்கின்றார்,
-
(திருப்புறம்பயம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 10)
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக்
    குமரனும் விக்கின விநாயகன்னும்
பூவாய பீடத்து மேல்அயன்னும்
    பூமியளந்தானும் போற்றிசைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடியாடிப்
    பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறி வண்டார்க்கப்
    புறம்பயம் நம்ஊரென்று போயினாரே

(2)
திருவாய்மூரில் சம்பந்தப் பெருமானுக்கும்; நாவுக்கரசு சுவாமிகளுக்கும் சிவபரம்பொருள் அம்மையப்பராய்; சிவகணங்கள் சூழ்ந்திருக்கும் திருக்கோலத்தில் திருக்காட்சி தந்தருள, அச்சமயத்தில் அப்பர் அடிகள் போற்றிசைத்த திருப்பதிகப் பாடலில் 'மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்' என்று பதிவு செய்கின்றார், 
-
(திருவாய்மூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 8 )
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
    போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க்கருளும் பரிசும் கண்டேன்
    பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
    மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்குமாறு கண்டேன்
    வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

(3)
'மானேறு கரமுடைய வரதர் போலும்' என்று துவங்கும் திருவீழிமிழலைத் திருப்பதிகப் பாடலில், விநாயகப் பெருமான் கயமுகாசுரனை சம்ஹாரம் புரிந்தருளிய நிகழ்வினை 'கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்' என்று பதிவு செய்து போற்றுகின்றார்,
-
(திருவீழிமிழலை - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 4)
கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் 
    கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
    திசைமுகன்தன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்தி தலையறுத்தார் போலும்
    வியன் வீழிமிழலைஇடம் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும்
    அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

(4)
'சொல்லானைப் பொருளானை' என்று துவங்கும் திருநாரையூர் திருப்பதிகப் பாடலில், 'அறுமுகனோ(டு)  ஆனைமுகற்(கு) அப்பன் தன்னை' என்று நயம்பட குறித்துப் போற்றுகின்றார்,
-
(திருநாரையூர் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 7)
தக்கனது வேள்விகெடச் சாடினானைத்
    தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானைக்
    கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
    அறுமுகனோ(டு)ஆனைமுகற்(கு) அப்பன் தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

(5)
'உரித்தவன் காண்' என்று துவங்கும் திருக்கச்சி ஏகம்பத் திருப்பதிகப் பாடலில், 'கடமா முகத்தினாற்குத் தாதை காண்' என்று போற்றுகின்றார்,
-
(திருக்கச்சி ஏகம்பம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 9)
முந்தைகாண் மூவரினும் முதலானான் காண்
    மூவிலைவேல் மூர்த்திகாண்; முருக வேட்குத்
தந்தைகாண்; தண்கடமா முகத்தினாற்குத்
    தாதைகாண்; தாழ்ந்தடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண்; சிந்தாத சித்தத்தார்க்குச்
    சிவனவன் காண்; செங்கண்மால் விடையொன்றேறும்
எந்தைகாண்; எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்; அவன்என் எண்ணத்தானே

(6)
'சுண்ண வெண் சந்தனச் சாந்தும்' என்று துவங்கும் திருவதிகைத் திருப்பதிகப் பாடலில் கணபதி எனும் திருநாமத்தைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு அற்புத நுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றார். 'ஒன்றன்பின் ஒன்றாக எதன் மீதாவது ஓயாத பற்று கொண்டுழல்வோரின் மனதில் எழுந்தருளி, அம்மாயையிலிருந்து அவர்களை விடுவித்து; வேட்கை தணிவித்து; முத்திநெறியினை நோக்கி இட்டுச் செல்பவர் கணபதி' என்று போற்றுகின்றார். 
-
'பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதியென்னும் களிறு' எனும் வரிகளுக்கு நேரடையாகப் பொருள் கொள்ளுதல் பிழை. சான்றோர்கள் இவ்வரிகளுக்கு அற்புதமான விளக்கங்களை அளித்து விநாயகப் பெருமானைப் போற்றியுள்ளனர். சிந்தித்து உய்வு பெறவேண்டிய திருப்பாடல் வரிகள் இவை, 
-
(திருவதிகை வீரட்டானம் - அப்பர் தேவாரம் - திருப்பாடல் 5)
பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியும் கணபதியென்னும் களிறும்
வலமேந்திரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலமார் கெடிலப் புனலும் உடையார்ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதொன்றும்இல்லை அஞ்ச வருவதுமில்லை!!

நம்பியாண்டார் நம்பிகள் போற்றும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்:

சிதம்பரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர், திருஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசு சுவாமிகளால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. அடிப்படையில் சிவத்தலமாக விளங்கும் இவ்வாலயத்தில் விநாயகப் பெருமான் 'பொள்ளாப் பிள்ளையார்' எனும் திருநாமத்துடன் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார். 'பொள்ளா' எனும் பதம் 'உளியால் செதுக்கப்படாத சுயம்புத் தன்மையை' குறிக்க வந்தது, இம்மூர்த்தியின் திருநாமம் நாளடைவில் மருவி 'பொல்லாப் பிள்ளையார்' என்று தற்பொழுது பிரசித்தமாக அறியப்பட்டு வருகின்றார்.

பன்னிரு சைவத் திருமுறைகளுள், 11 திருமுறைகள் வரையிலும் தொகுத்தளித்தவராகவும், 11ஆம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகவும் விளங்கும் நம்பியாண்டார் நம்பிகளின் அவதாரத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கின்றது. சிறு பிராயத்தில், நிவேதன உணவினைப் பொல்லாப் பிள்ளையார் ஏற்கவில்லையே என்று பெரிதும் ஏங்கி வருத்தமுற்றுத் தன் இன்னுயிரையும் மாய்க்கத் துணிந்த நாள் முதல், அனுதினமும் நேரில் தோன்றி நம்பிகளுடன் உரையாடியவாறே நிவேதன உணவை உண்டு அருள் புரிவாராம் இப்பொல்லாப் பிள்ளையார். 
அது மட்டுல்லாது, பால்ய பருவத்திலிருந்தே நம்பிகளைத் தம்முடைய சீடராகவும் ஏற்று ஞானாசிரியராகவும் விளங்கிப் பேரருள் புரிந்துள்ளார் இப்பிள்ளையார். அடியார்க்கு எளியரான இம்மூர்த்தியே 'தேவாரத் திருமுறைகள் தில்லைத் திருக்கோயிலில், திருக்காப்பிட்ட ஓர் அறையினுள் இருப்பதனை' நம்பிகளுக்கு அறிவித்து அருள் புரிந்தவர். நம்பிகள் இப்பிள்ளையாருக்கென 20 திருப்பாடல்களால் கோர்க்கப்பெற்றுள்ள 'திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை' எனும் அரிய பாடல் தொகுப்பினை 11ஆம் திருமுறையில் அருளிச் செய்துள்ளார்.
-
(திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை - திருப்பாடல் 1):
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
-
(திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணி மாலை - திருப்பாடல் 7):
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருந்த எண்ணுகின்ற மலம்

விநாயக வணக்கத்துடன் துவங்கும் பெரிய புராணம்:

'என்ன பெரிய புராணம் விநாயக வணக்கத்துடன் துவங்குகின்றதா?', 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனும் துவக்கத் திருப்பாடல் தில்லைப் பரம்பொருளான நடராஜப் பெருமானையன்றோ போற்றுகின்றது? எனும் வினா எழுவது இயல்பே, இனி பதிவிற்குள் செல்வோம், 

(1)
தில்லைத் திருத்தலத்தில் சேக்கிழார் பெருமான் பெரிய புராண மாகாவியத்தை எழுதத் துவங்கும் சமயத்தில், பொன்னம்பலம் மேவும் சிற்சபேசப் பரம்பொருள் அசரீராய் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்துப் பேரருள் புரிகின்றார். கூத்தர் பிரானின் பெருங்கருணையை நினைந்துருகிக் கண்ணீர் பெருக்கி, அடியெடுத்துக் கொடுத்த ஆடல்வல்லானைப் போற்றுமுகமாக முதல் திருப்பாடலை அருளிச் செய்கின்றார் தெய்வச் சேக்கிழார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 1)
உலகெலாம் உணர்ந்(து) ஓதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

(2)
பின்னர் 2ஆம் திருப்பாடலில், தில்லையில் திருக்கூத்தியற்றும் பொன்னம்பலப் பரம்பொருளின் திருவடிகளைத் தரிசித்துத் தொழுவதே இப்பிறவிக் கடலினின்றும் மீள்வதற்கான அரியதொரு உபாயமென்று அறிவுறுத்துகின்றார், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 2)
ஊனடைந்த உடம்பின் பிறவியே
தானடைந்த உறுதியைச் சாருமால்
தேனடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாநடம் செய் வரதர் பொற்றாள்தொழ

(3)
மேற்குறித்துள்ள இரு திருப்பாடல்களும், 'அடியெடுத்துக் கொடுத்தருளிய முக்கண் முதல்வருக்கு நன்றி பாராட்டு முகமாக நம் சேக்கிழார் பெருமானின் உள்ளத்தினின்றும் வெளிப்பட்டுள்ளது' என்பது தெளிவு. இதனைத் தொடர்ந்து வரும் 3ஆம் திருப்பாடலில் பிரணவ முகத்துக் கடவுளான நம் விநாயகப் பெருமானைப் போற்றிப் பணிகின்றார் சேக்கிழார் அடிகள், 
-
(பெரிய புராணம் - திருமலைச் சருக்கம்: திருப்பாடல் 3)
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்
-
'பிறவிப் பிணியிலிருந்து யாவரையும் மீட்டெடுக்கவல்ல, திருத்தொண்டர்களைப் போற்றும் இம்மெய்மையான வரலாற்று நிகழ்வுகள் முழுவதும் அற்புதத் திருப்பாடல்களாய் அமைந்து வெளிப்பட்டு; யாவருக்கும் நன்மை செய்ய, ஐந்து திருக்கரங்களையும்; தாழ்ந்து அசையும் இரு திருச்செவிகளையும்; நீள்முடியையும் கொண்டருளும், மதம் பொருந்திய வேழ முகத்துக் கடவுளான விக்னேஸ்வரரின் திருவருளை வேண்டிப் பணிவோம்' என்று சேக்கிழார் பெருமானார் போற்றுகின்றார்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம்:

காஞ்சிபுரத்தில், சுமார் 10 முதல் 11ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஆதி சைவ மரபில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். தமிழ்; வடமொழி இரண்டிலுமே பெரும் புலமை கொண்டிருந்த தகைமையாளர். சமய; விசேட; நிர்வாண தீட்சைகளுடன் ஆச்சாரிய அபிஷேக நிலையையும் எய்தியிருந்த பெருந்தகையார். தந்தையாரைத் தொடர்ந்து குமரக் கோட்டத் திருக்கோயிலில் அர்ச்சகராகவும் விளங்கி வழிபாடியற்றி வருகின்றார்.   

இப்பெருமகனாரின் கனவில் எழுந்தருளிச் செல்லும் குமரக் கோட்ட வேலவன், 'அன்பனே, வேத வியாசனின் வடமொழி ஸ்காந்த புராணத்திலுள்ள சங்கர சம்ஹிதையில், சிவரகசிய கண்டத்தின் முதல் ஆறு பகுதிகளைத் தமிழில் இயற்றுவாயாக' என்று கட்டளையிட்டு, 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிகின்றான். 

ஆறுமுகப் பெருமானின் திருவருள் திறத்தினை வியந்து போற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார், கந்தவேள் அளித்தருளிய முதலடியுடன் துவங்கும், பின்வரும் விகட சக்கர விநாயக வணக்கப் பாடலுடன் (10,345 திருப்பாடல்களைக் கொண்ட) கந்தபுராணத்தினை அருளிச் செய்கின்றார், 
-
(கந்தபுராணம் - விநாயக வணக்கத் திருப்பாடல்)
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!!
-
(பொருள்)
இனி மேற்குறித்துள்ள திருப்பாடலின் ஒவ்வொரு வரிக்குமான பொருளையும் சிந்தித்து மகிழ்வோம்,
-
(திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்)
திகழ்கின்ற தசக் கரங்களையும் (10 திருக்கரங்களையும்), ஐந்து திருமுகங்களையும் கொண்டருள்பவர் ஆதிப்பரம்பொருளான சிவபெருமான் 
-
(சகட சக்கரத் தாமரை நாயகன்)
சிவமூர்த்தி திரிபுர சம்ஹார காலத்தில் நால்வேதப் புரவிகள் பூட்டிய திருத்தேரில் எழுந்தருளிச் செல்லுகையில், அத்தேருக்கு சக்கரமாக விளங்கியவன் (தாமரை நாயகனான) சூரிய தேவன்
-
(அகட சக்கர இன்மணி யாவுறை)
'அகடு அசக்கரம்' என்பது பாடல் நயத்திற்காக அகட சக்கரமாயிற்று. 'அகடு' என்பது திருவயிற்றையும், 'அசக்கரம்' என்பது பெரியதொரு பாம்பையும் சுட்ட வந்தது. பிரணவ முக தெய்வமான விநாயகப் பெருமான் தனது திருவயிற்றில் பாம்பொன்றினை 'உதரபந்தனம்' எனும் ஆபரணமாகச் சூடியிருப்ப்பார். 'விக்னேஸ்வர மூர்த்தி விஸ்வரூப திருக்கோலத்துடன் தோன்றி அருள் புரிகையில், அளவில் மிக பிரமாண்டமாக விளங்கும் சூரிய கிரக தேவனும் அவருடைய திருவயிற்று ஆபரணத்தின் இடையிலுள்ள சிறுமணியெனத் திகழ்கின்றான்' என்பது இவ்வரியின் உட்கருத்து. 
-
(விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்)
'இத்தகு சீர்மையும் மேன்மையும் பொருந்திய விகட சக்கர விநாயக மூர்த்தியின் பொன்னார்த் திருவடிகளைப் போற்றுவோம்' என்று கச்சியப்ப சிவாச்சாரியார் பணிந்தேத்துகின்றார். 

காஞ்சியின் தல விநாயகரான இம்மூர்த்தி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுள், இறைவரின் திருச்சன்னிதிக்கு செல்லும் பிரதான வழியில் அல்லாமல், ஆயிரங்கால் மண்டபத்தில்; இறைவர் விழாக்காலத்தில் வெளிவரும் கோபுர வாயிலுக்கு இடப்புறம் எழுந்தருளி இருக்கின்றார். கச்சி ஏகம்பமெனும் இவ்வாலயத்தினைத் தரிசிக்கச் செல்லுகையில் அவசியம் 'விகட சக்கர' விநாயகக் கடவுளைத் தரிசித்துப் பணிந்து நலமெலாம் பெற்று வாழ்வோம்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் திருவிளையாடல் புராணம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

அகச் சந்தானக் குரவர்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் பரஞ்சோதி முனிவரும், திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரும் ஒருவரல்லர் எனும் முக்கியக் குறிப்பினை முதற்கண் உள்ளத்தில் இருத்துதல் வேண்டும். சந்தானக் குரவரான பரஞ்சோதி முனிவர் கால வரையறைகள் யாவையும் கடந்து முற்பட்டு விளங்குபவர், முன்னமே சிவமுத்திப் பேறு பெற்றுள்ள சிவபுண்ணிய சீலர், மெய்கண்ட தேவரின் குருநாதர். 

மற்றொருபுறம் திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரோ 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய அருளாளர். அவதாரத் தலம் நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தமிழ்; வடமொழி இலக்கண இலக்கியங்களில் பெரும்புலமை கொண்டிருந்த தகைமையாளர். மதுரையில் சிவதீக்ஷை பெற்றுத் துறவு வழியில் நின்ற பெருந்தகையார். சிவமுத்தித் தலம் 'திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள சேகல் (மடப்புரம்) எனும் சிற்றூர்'. இங்குள்ள பரஞ்ஜோதீஸ்வரர் ஆலயமே இப்பெருமகனாரின் ஜீவசமாதித் திருக்கோயிலாகும். 

ஒரு சமயம் சோமசுந்தரப் பரம்பொருளின் காதலியாராகவும், மதுரைப் பேரரசியாகவும், நால்வேதத் தலைவியாகவும் விளங்கியருளும் நம் மீனாட்சியம்மை பரஞ்சோதியாரின் கனவில் எழுந்தருளிச் சென்று, 'வடமொழி ஹாலாஸ்ய புராணத்தில் இடம்பெறும் சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்களைத் தொகுத்துத் தீந்தமிழில் புனையுமாறு கட்டளையிட்டு, 'சத்தியாய்' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிகின்றாள். 

இது மொழிபெயர்ப்பு நூலல்ல, பரஞ்சோதி முனிவர் மூல நூலிலுள்ள நிகழ்வுகளை மட்டும் உள்வாங்கிக் கொண்டு, வேதாகமங்கள்; சைவ சித்தாந்த சாத்திரங்கள்; பன்னிரு திருமுறைகள் இவைகளின் சாரப் பிழிவினை ஆங்காங்கே வெளிப்படுத்தி, அற்புதத்திலும் அற்புதமான ஆலவாய்ப் பரம்பொருளின் 64 திருவிளையாடல்களை 3363 திருப்பாடல்களாகப் புனைந்து அருளியுள்ளார். 

ஆலவாய்ப் பேரரசி அளித்தருளிய 'சத்தியாய்' எனும் முதற்சொல்லோடு, பிரணவ முகக் கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றியவாறு தன் புராணத்தினைத் துவக்குகின்றார் பரஞ்சோதி முனிவர்,
-
(திருவிளையாடல் புராணம் - விநாயக வணக்கத் திருப்பாடல்), 
சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பர 
முத்தியான முதலைத் துதிசெயச் 
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ 
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே 
-
(பொருள்):
'சத்தி; சிவம் எனும் வடிவினராய் விளங்கி, சிவமுத்திப் பேற்றினை அளித்தருளும் முதற்பொருளான சொக்கநாதப் பரம்பொருளின் திருவிளையாடல்களைப் புனைந்து போற்றுதற்கு, அற்புதக் கருத்துக்களோடு கூடிய தூய்மையான சொற்கள் அமைந்து வெளிப்பட, சித்தி விநாயகப் பெருமானின் பொன்போலும் திருவடிகளைப் பணிந்தேத்துவோம்' என்று போற்றுகின்றார் பரஞ்சோதி முனிவர்.

விநாயகப் பெருமான் எதனால் மகாவிஷ்ணுவின் சக்கரத்தை விழுங்கினார்? (காஞ்சிப் புராணத்தில் சிவஞான முனிவரின் அற்புத விளக்கம்):

விநாயகப் பெருமான் ஒருசமயம் திருமாலின் சக்கரத்தை விழுங்கித் திருவிளையாடல் புரிய, திருமால் செய்வதறியாது திகைத்து விகட நடனமொன்று புரிந்ததாகவும், அதுகண்டு விக்னேஸ்வர மூர்த்தி சிரிக்கையில் அச்சக்கரம் வெளிப்பட்டதாகவும் புராண நிகழ்வொன்றினைக் கேள்வியுற்றிருப்போம். மற்றொருபுறம் காஞ்சிப் புராணமோ 'திருமால் சார்பாக விஷ்வக்சேனரே விகட நடனம் ஆடிச் சக்கரத்தைப் பெற்றதாக' பதிவு செய்கின்றது. 

எதுவாயினும் 'விநாயகப் பெருமான் எதன் பொருட்டு சக்கரத்தை விழுங்கியிருப்பார்?' எனும் வினாவிற்கு, காஞ்சிப் புராணத்தை அருளியுள்ள சிவஞான முனிவர் பின்வரும் அற்புதத் திருப்பாடலில் விடை பகர்கின்றார்,
-
சிவபரம்பொருள் சலந்தரனை வதம் புரிவதற்குப் பயன்படுத்திய சக்கரத்தை, தன்னுடைய கண் விழியினையே மலராக்கிப் புரிந்த சிவபூசனையால் திருமால் பெறுகின்றார். எனினும் அச்சக்கரத்தில் சலந்தரனுடைய குருதியின் முடைநாற்றம் முற்றிலுமாய் அகலாதிருக்கின்றது. பின்னாளில் கருணைக் கடலான விக்னேஸ்வர மூர்த்தி அச்சக்கரத்தினை விழுங்குவதாகத் திருவிளையாடல் புரிந்து, விகட நடனத்தையே தனக்குரிய பூஜையாக ஏற்று, தன்னுள் பெருகும் மதநீரால் அவ்வாடையினைப் போக்கி; மணமேற்றி, அதனை மீண்டும் திருமாலுக்கு அளித்து அருள் புரிகின்றார். இத்தன்மையினால், 'வேண்டுவோரின் பழியினை நீக்கியருளும், தந்தையான சிவபரம்பொருளினும் மேம்பட்ட புகழ்பொருந்திய விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிவோம்' என்று போற்றுகின்றார் சிவஞான முனிவர்.    
-
(காஞ்சிபுராணம் - விகடசக்கர விநாயகக் கடவுள் வணக்கம்):
விழிமலர்ப் பூசனைஉஞற்றித் திருநெடுமால் பெறும்ஆழி மீளவாங்கி
வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி முடைநாற்றம் மாறுமாற்றால்
பொழிமதநீர் விரையேற்றி விகடநடப் பூசைகொண்டு புதிதா நல்கிப் 
பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த மதமாவைப் பணிதல் செய்வாம்

இனி விநாயக வணக்கத்துடன் துவங்கும் காஞ்சிப்புராணத்தின் முதல் திருப்பாடலையும் சிந்தித்து மகிழ்வோம்,
-
இருகவுள் துளை வாக்கு கார்க்கடங்கள் இங்குலிகக்
குரு நிறத்திழி தோற்றமுன் குலாய்த் தவழ்ந்தேறிப்
பரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலும் 
திருநிகர்த்த சீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம்
-
(சொற்பொருள்: கவுள் - கன்னம், வாக்கு(தல்) - வடித்தல், இங்குலிகம் - சிவப்பு, குரு - நிறம், நிறம் - மார்பு) 
-
(சுருக்கமான பொருள்):
'பொன்னிறமான சூரிய தேவனின் மார்பில்; கரிய நிறத்து மகனான யமனும்; மகளான காளிந்தியும் தவழ்வது போல், திருச்செவிகளினின்றும் பெருகும் கரிய மதநீர் பொன்னிறத் திருமேனியில் வழிந்தோடும் தன்மையினரான பிரணவ முகப் பெருங்கடவுளான விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சார்வோம்' என்று போற்றிப் பணிந்து, சிவபரத்துவம் பேணும் காஞ்சிப்புராண நூலினைத் துவங்குகின்றார் சிவஞான முனிவர்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் சைவ சித்தாந்த சாத்திரங்கள் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

முதற்கண் 14 சைவ சித்தாந்த சாத்திரங்களையும், அவைகளை அருளிச் செய்துள்ள 6 ஆச்சாரியர்களையும் காண்போம், 

1. திருவுந்தியார் - (திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார்)
2. திருக்களிற்றுப்படியார் - (திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார். இவர் திருவுந்தியார் ஆசிரியரின் மாணவராவார்)
3. சிவஞான போதம் - (மெய்கண்ட தேவர்)
4. சிவஞான சித்தியார் - (அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட தேவரின் ஞான சீடராவார்)
5. இருபா இருபஃது  - (அருணந்தி சிவாச்சாரியார்) 
6. உண்மை விளக்கம் - (மனவாசகம் கடந்தார். இவர் மெய்கண்ட தேவரின் மாணாக்கர்களுள் ஒருவர்)
7. சிவப்பிரகாசம் - (உமாபதி சிவாச்சாரியார். இவர் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடரான மறைஞான சம்பந்தரின் ஞான சீடராவார்)
8. திருவருட்பயன் - (உமாபதி சிவாச்சாரியார்) 
9. வினாவெண்பா - (உமாபதி சிவாச்சாரியார்) 
10. போற்றிப் பஃறொடை - (உமாபதி சிவாச்சாரியார்)
11. கொடிக்கவி - (உமாபதி சிவாச்சாரியார்) 
12. நெஞ்சுவிடு தூது - (உமாபதி சிவாச்சாரியார்) 
13. உண்மை நெறி விளக்கம் - (உமாபதி சிவாச்சாரியார்)
14. சங்கற்ப நிராகரணம் - (உமாபதி சிவாச்சாரியார்)

சிந்தாந்த ஞானாசிரியர்களுள் உமாபதி சிவாச்சாரியார் மட்டுமே 8 சாத்திர நூல்களை இயற்றியளித்துள்ளார். 

இனி விநாயகப் பெருமானின் வணக்கப் பாடலுடன் துவங்கும் நான்கு சித்தாந்த ஆச்சாரியார்களின் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,  
-
(1)
திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் திருவடி மலர்களைப் போற்றியவாறு மெய்கண்ட தேவர் தன் சிவஞானபோதமெனும் சாத்திரத்தைத் துவங்குகின்றார், 
-
(சிவஞானபோதம் - மெய்கண்ட தேவர்)
கல்லால் நிழல்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே

(2)
'விநாயகப் பெருமானைப் போற்றித் துதித்து வழிபடுவோரின் அஞ்ஞானம் முற்றிலுமாய் விலகுவதோடல்லாமல், பிரமன்; திருமால் ஆகியோரின் செல்வங்களும் அளவில் சிறியதே என்றெண்ணும் வகையிலான (வீடுபேறான) திருவருட் செல்வத்தைப் பெற்று மகிழ்வர்' என்று அருணந்தி சிவாச்சாரியார் போற்றுகின்றார், 
-
(சிவஞான சித்தியார் - அருணந்தி சிவாச்சாரியார்):
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டன்பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும் ஒன்றோ என்னச் செய்யும் தேவே!!!

(3)
'சிவபரம்பொருள் அருளியுள்ள ஆகமப் பொருளினின்றும் வழுவாத தன்மையில் இச்சாத்திரத்தின் விளக்கவுரைகள் அமைந்திட, பிரணவ முகத்துக் கடவுளான விக்னேஸ்வரரை உள்ளத்திலிருத்தித் தொழுவோம்' என்று 'மனவாசகம் கடந்தார்' பணிந்தேத்துகின்றார், 
-
(உண்மை விளக்கம் - மனவாசகம் கடந்தார்)
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்(று) ஐங்கரனைப்
பந்தமறப் புந்தியுள் வைப்பாம்

(4)
'விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பணிபவர்களது அஞ்ஞானம் விலகும்; வினைகள் சேராது' என்று அறிவுறுத்திப் பணிகின்றார் உமாபதி சிவாச்சாரியார். 
-
(சிவப்பிரகாசம் - உமாபதி சிவாச்சாரியார்):
ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு
களியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்
அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே

(5)
'விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுவோருக்கு மட்டுமே வேதாகம சாத்திரங்களின் உட்பொருள் எளிதில் சித்திக்கப் பெறும் ('ஏனையோருக்கு அவ்வுண்மைகள் புலப்படாது மறைந்திருக்கும்')' என்று தெளிவுறுத்திப் போற்றுகின்றார் உமாபதி சிவாச்சாரியார்,  
-
(திருவருட்பயன் - உமாபதி சிவாச்சாரியார்):
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்

ஒளவை தொழும் யானை முக தெய்வம் (நல்வழி; மூதுரை; கொன்றை வேந்தன்; ஆத்திச்சூடியில் விநாயக வணக்கப் பாடல்கள்):

தமிழ் மூதாட்டி என்று நம்மால் உரிமையோடும் அன்போடும் கொண்டாடப் பெறுபவர் ஒளவை. இத்திருப்பெயரிலேயே வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு பெண்ணின் நல்லாள் தோன்றி, தமிழ்ச் சமூகத்தினைப் பல்வேறு பரிமாணங்களில் செம்மைப் படுத்தி வந்துள்ளார் என்பர் சிலர். மற்றொரு சாரார் ஒரே ஒளவையே, சித்தர்களைப் போன்று, எண்ணிறந்த காலங்களுக்கு வாழ்ந்திருந்து; அவ்வப்பொழுது தோன்றி ஞான போதனைகளைச் செய்து வந்துள்ளார் என்பர். எதுவாயினும் ஒளவைக்கும் விநாயகப் பெருமானுக்குமான தொடர்பு மிகமிக இனிமையானது; தனித்துவமானது, விக்னேஸ்வர மூர்த்தியின் பூரணமான திருவருளைப் பெற்றிருந்தாள் நம் ஒளவையன்னை.  
-
இனி பொதுவில் குறிக்கப் பெறும் வெவ்வாறு காலகட்டத்து அவ்வையார்களின் பட்டியலைக் காண்போம், 
-
(1) சங்ககால ஒளவை: இவரே இளமைக் காலத்தில் விநாயகப் பெருமானை வேண்டி வடிவுறு மூப்பினை வரமாகப் பெற்ற தமிழ்ச் செல்வி, மூவேந்தர் தொடர்புடைய நிகழ்வுகளில் குறிக்கப் பெறும் தமிழன்னை. பெரும்பாலான வலைத்தளங்களில் சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடியுள்ளார் என்று பதிவு செய்கின்றனரே அன்றி, இளமையிலேயே முதுமை எய்தியிருந்த முக்கியக் குறிப்பினை, கவனக் குறைவாலோ அல்லது பிற காரணங்களினாலோ பதிவு செய்யாது விடுத்திருப்பது வருந்தத் தக்கது. வள்ளுவனாரின் திருக்குறளுக்கு, மதுரைப் பொற்றாமரைக் குளத்தில்; சங்கப் பலகையினை வரவழைத்து அரியதொரு அங்கீகாரம் கிடைக்கச் செய்தது இப்பெருமாட்டியே. 
-
(2) 2ஆம் ஒளவை: விநாயகர் அகவலெனும் அற்புதப் பனுவலை அருளிச் செய்தவர் இவரே. 
-
(3) 3ஆம் ஒளவை: ஆத்திச் சூடி; கொன்றை வேந்தன்; நல்வழி; மூதுரை முதலிய நூல்களைத் தந்தவர்
-
(4) 4ஆம் ஒளவை: மிகுதியான தனிப்பாடல் தொகுப்புகளைப் பாடியவர் இவரென்பார்.  

இனி 3ஆம் ஒளவையால் போற்றப் பெறும் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 
-
(1)
(நல்வழி - விநாயக வணக்கப் பாடல்)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்; கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே; நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

(2)
(மூதுரை - விநாயக வணக்கப் பாடல்)
வாக்குண்டாம்; நல்ல மனமுண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

(3)
(கொன்றை வேந்தன் - விநாயக வணக்கப் பாடல்)
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
-
(பொருள்)
கொன்றையைத் திருமுடியில் சூடும் சிவபரம்பொருளின் திருச்செல்வனான விநாயகப் பெருமானின் சிவஞானமேயாகிய திருவடிகளை என்றுமே போற்றிப் பணிவோம்

(4)
(ஆத்திச் சூடி)
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
-
(பொருள்)
ஆத்தி மலரை அணிந்தருளும் சிவபரம்பொருளினால் பெரிதும் விரும்பப் பெறும் விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம் ('அமர்ந்த' எனும் சொல்லுக்கு - 'விரும்பிய' என்றொரு பொருளும் உண்டு).

விநாயக வணக்கத்துடன் துவங்கும் குமரகுருபரரின் பாடல் தொகுப்புகள்:

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் குமரகுருபரர், அவதாரக் காலம் 63 ஆண்டுகள் (1625 - 1688). அவதாரத் தலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் தலத்திற்கு வடபால் அமைந்துள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதி. தன்னுடைய 6ஆம் வயதில் செந்தூர் வேலவனின் பேரருளால் பேச்சுத் திறன் பெற்று 'கந்தர் கலி வெண்பா' எனும் பாமாலையை அருளிச் செய்தவர். இவர் மதுரையில்; திருமலை நாயக்கரின் சபையில் அரங்கேற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல்களை, உலகீன்ற மீனாட்சி அன்னையே, சிறு பெண் குழந்தையொன்றின் வடிவில் எழுந்தருளி வந்து; நாயக்க மன்னரின் மடிமீது அமர்ந்திருந்து கேட்டருளினாள் எனில் குமரகுருபர சுவாமிகளின் தவச்சிறப்பினை என்னென்று போற்றுவது.      

தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரை ஞானசிரியராகக் கொண்டு அப்பெருமகனாருக்குத் திருவடித் தொண்டு புரிந்து வந்தார் சுவாமிகள். பின்னர் குருநாதரின் கட்டளையினை ஏற்றுக் காசித் திருத்தலத்தில் பன்னெடுங்காலம் திருத்தொண்டு புரிந்து வந்தார், இவரின் முத்தித் தலமும் காசியே. குருபூஜைத் திருநாள் வைகாசி மாதத் தேய்பிறையில் வரும் திருதியைத் திதி (அதாவது வைகாசி மாத பௌர்ணமியை அடுத்த 3ஆம் நாளில் வரும் திருதியைத் திதி) .

சுவாமிகள் அருளிச் செய்துள்ள 16 பாடல் தொகுப்புகளில், 'கயிலைக் கலம்பகம்; காசித் துண்டி விநாயகர் பதிகம்' எனும் இவ்விரு தொகுப்புகளும் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை. மீதமுள்ள 14 தொகுப்புகளில், 8 தொகுப்புகள் விநாயக வணக்கத் திருப்பாடலுடன் துவங்குகின்றன, அவற்றுள், பதிவின் நீளம் கருதி, 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' மற்றும் 'வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ்' எனும் இவ்விரு தொகுப்புகளையும் விடுத்து, ஏனைய 6 தொகுப்புகளின் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

1. கயிலைக் கலம்பகம் (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
2. காசிக் கலம்பகம் 
3. காசித் துண்டி விநாயகர் பதிகம்  (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
4. சகலகலாவல்லி மாலை 
5. சிதம்பர மும்மணிக் கோவை 
6. சிதம்பரச் செய்யுட் கோவை 
7. திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா 
8. திருவாரூர் நான்மணிமாலை
9. தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
10. நீதிநெறி விளக்கம் 
11. பண்டார மும்மணிக் கோவை
12. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை
13. மீனாட்சியம்மை குறம் 
14. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் 
15. மதுரைக் கலம்பகம் 
16. வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் 

(1)
(காசிக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி
நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற
காரார் வரையீன்ற கன்னிப்பிடி அளித்த
ஓரானை வந்தென் உளத்து
-
(இறுதி இரு வரிகளின் பொருள்)
வரையீன்ற (மலைமகளான) கன்னிப் பிடி ('பெண் யானை' போன்ற) உமையன்னை அளித்தருளிய விநாயகக் கடவுளை உள்ளத்தில் இருத்தித் தொழுவோம்

(2)
(சிதம்பர மும்மணிக்கோவை - விநாயக வணக்கப் பாடல்)
செம்மணிக்கோவைக் கதிர்சூழ் தில்லைச் சிற்றம்பலவன்
மும்மணிக்கோவைக்கு வந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ
அஞ்சக்கரக் கற்பகத்தார் இறைஞ்சும்; அஞ்சு
கஞ்சக்கரக் கற்பகம்

(3)
(திருவாரூர் நான்மணி மாலை - விநாயக வணக்கப் பாடல்)
நாடும் கமலேசர் நான்மணி மாலைக்கு மிகப்
பாடும் கவிதைநலம் பாலிக்கும் - வீடொன்ற
முப்போதகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும்
கைப் போதகத்தின் கழல்

(4)
(பண்டார மும்மணிக் கோவை - விநாயக வணக்கப் பாடல்)
எண்திசைக்கும் சூளாமணி மாசிலாமணிசீர்
கொண்டிசைக்கு(ம்) மும்மணிக் கோவைக்குக் கண்டிகைபொற்
பைந்நாகத்தான் அனத்தான் பாற்கடலான் போற்றஅருள்
கைந்நாகத்(து) ஆனனத்தான் காப்பு
-
தன்னுடைய குருநாதரான, தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரைப் போற்று முகமாக அருளிச் செய்துள்ள பாமாலையிது. 

(5)
(மதுரை மீனாட்சியம்மை குறம் - விநாயக வணக்கப் பாடல்)
கார்கொண்ட பொழில்மதுரைக் கர்ப்பூரவல்லி மணம் கமழும் தெய்வத்
தார்கொண்ட கருங்குழல் அங்கயற்கண் நாயகிகுறம் செந்தமிழால் பாட
வார்கொண்ட புகர்முகத்(து) ஐங்கரத்(து) ஒருகோட்(டு) இருசெவி மும்மதத்து நால்வாய்ப்
போர்கொண்ட கவுள்சிறுகண் சித்திவிநாயகன் துணைத்தாள் போற்றுவாமே.

(6)
(மதுரைக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
புந்தித் தடத்துப் புலக்களிறோடப் பிளிறுதொந்தித்
தந்திக்குத் தந்தை தமிழ்க்குத(வு) என்ப(து)என்; தண்ணளிதூய்
வந்திப்பதும்தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்துநின்று
சிந்திப்பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே

அபிராமி பட்டர் போற்றும் யானை முக தெய்வம் (அபிராமி அந்தாதியின் விநாயக வணக்கப் பாடல்):

18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்தின் தவப்பயனாய் அவதரித்த அருளாளர் அபிராமி பட்டர். அவதாரத் தலம் திருக்கடையூர். இயற்பெயர் சுப்பிரமணியர். முதலாம் சரபோஜி மன்னரின் முன்னிலையில், 100 திருப்பாடல்களைக் கொண்ட 'அபிராமி அந்தாதி' எனும் ஒப்புவமையற்ற செந்தமிழ்ப் பனுவலை அருளிச் செய்து, அபிராமி அன்னையின் திருவருளால் அமாவாசையன்று முழுநிலவைத் தோன்றுமாறு செய்வித்த உத்தம சீலர். 

சீர்மிகு சைவ மரபில், அருளாளர்கள் எந்தவொரு தெய்வத்தைப் போற்றுவதாக இருப்பினும், முதல் வணக்கத்தினை பெற்றருள்பவர் நம் விநாயகப் பெருமானன்றோ! அபிராமி பட்டரும் அம்முறையிலேயே காதலோடு விக்னேஸ்வர மூர்த்தியைப் போற்றிப் பரவி ஆசி பெற்ற பின்னரே தன்னுடைய பனுவலைத் துவங்குகின்றார்.

(அபிராமி அந்தாதி - விநாயகர் காப்புப் பாடல்)
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர் தம் பாகத்(து) உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே; நிற்கக் கட்டுரையே!!!

வாரியார் சுவாமிகள் அருளியுள்ள காங்கேயநல்லூர் சுந்தர விநாயகர் பதிகம்:


பிரசித்தி பெற்ற காங்கேயநல்லூர் முருகன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுந்தர விநாயகரைப் போற்றி நம் வாரியார் சுவாமிகள் அருளியுள்ள திருப்பதிகப் பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
ஐங்கரத்தால் ஐந்தொழிலும் ஆற்றுகின்ற 
ஆனை முகத்தரசே; எம் ஆதிமூர்த்தி 
இங்குனது கருணை எனக்கில்லையாயின் 
எங்கடைவேன் எவர்க்குரைப்பேன் யாது செய்வேன் 
செங்கைநிறை ஆமலகக் கனிபோல் உன்றன் 
திருவருள் தந்தருள் புரிவாய் தேவ தேவே 
துங்கமிகு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே! 
-
(பொருள்: ஆமலகக் கனி - நெல்லிக்கனி)

(2)
கதியுதவு கணநாத; கருணைக் குன்றே 
கற்பகமே; கற்பகத் தீங்கனியே; கங்கை 
நதியுதவு திருமைந்த; நம்பியாண்டார் 
நவிலும் நறும் தமிழ்க்கவியை நயந்த தேவே 
விதியுதவு பிறவிதனை வேண்டேன் உன்றன் 
விரைமலர்த்தாள் வேண்டினனால்; வேத கீதத் 
துதியுதவு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே!!!