விநாயக வணக்கத்துடன் துவங்கும் திருவிளையாடல் புராணம் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

அகச் சந்தானக் குரவர்களுள் ஒருவராகப் போற்றப் பெறும் பரஞ்சோதி முனிவரும், திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரும் ஒருவரல்லர் எனும் முக்கியக் குறிப்பினை முதற்கண் உள்ளத்தில் இருத்துதல் வேண்டும். சந்தானக் குரவரான பரஞ்சோதி முனிவர் கால வரையறைகள் யாவையும் கடந்து முற்பட்டு விளங்குபவர், முன்னமே சிவமுத்திப் பேறு பெற்றுள்ள சிவபுண்ணிய சீலர், மெய்கண்ட தேவரின் குருநாதர். 

மற்றொருபுறம் திருவிளையாடல் புராண ஆசிரியரான பரஞ்சோதி முனிவரோ 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய அருளாளர். அவதாரத் தலம் நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தமிழ்; வடமொழி இலக்கண இலக்கியங்களில் பெரும்புலமை கொண்டிருந்த தகைமையாளர். மதுரையில் சிவதீக்ஷை பெற்றுத் துறவு வழியில் நின்ற பெருந்தகையார். சிவமுத்தித் தலம் 'திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள சேகல் (மடப்புரம்) எனும் சிற்றூர்'. இங்குள்ள பரஞ்ஜோதீஸ்வரர் ஆலயமே இப்பெருமகனாரின் ஜீவசமாதித் திருக்கோயிலாகும். 

ஒரு சமயம் சோமசுந்தரப் பரம்பொருளின் காதலியாராகவும், மதுரைப் பேரரசியாகவும், நால்வேதத் தலைவியாகவும் விளங்கியருளும் நம் மீனாட்சியம்மை பரஞ்சோதியாரின் கனவில் எழுந்தருளிச் சென்று, 'வடமொழி ஹாலாஸ்ய புராணத்தில் இடம்பெறும் சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்களைத் தொகுத்துத் தீந்தமிழில் புனையுமாறு கட்டளையிட்டு, 'சத்தியாய்' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிகின்றாள். 

இது மொழிபெயர்ப்பு நூலல்ல, பரஞ்சோதி முனிவர் மூல நூலிலுள்ள நிகழ்வுகளை மட்டும் உள்வாங்கிக் கொண்டு, வேதாகமங்கள்; சைவ சித்தாந்த சாத்திரங்கள்; பன்னிரு திருமுறைகள் இவைகளின் சாரப் பிழிவினை ஆங்காங்கே வெளிப்படுத்தி, அற்புதத்திலும் அற்புதமான ஆலவாய்ப் பரம்பொருளின் 64 திருவிளையாடல்களை 3363 திருப்பாடல்களாகப் புனைந்து அருளியுள்ளார். 

ஆலவாய்ப் பேரரசி அளித்தருளிய 'சத்தியாய்' எனும் முதற்சொல்லோடு, பிரணவ முகக் கடவுளான விநாயகப் பெருமானைப் போற்றியவாறு தன் புராணத்தினைத் துவக்குகின்றார் பரஞ்சோதி முனிவர்,
-
(திருவிளையாடல் புராணம் - விநாயக வணக்கத் திருப்பாடல்), 
சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பர 
முத்தியான முதலைத் துதிசெயச் 
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ 
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே 
-
(பொருள்):
'சத்தி; சிவம் எனும் வடிவினராய் விளங்கி, சிவமுத்திப் பேற்றினை அளித்தருளும் முதற்பொருளான சொக்கநாதப் பரம்பொருளின் திருவிளையாடல்களைப் புனைந்து போற்றுதற்கு, அற்புதக் கருத்துக்களோடு கூடிய தூய்மையான சொற்கள் அமைந்து வெளிப்பட, சித்தி விநாயகப் பெருமானின் பொன்போலும் திருவடிகளைப் பணிந்தேத்துவோம்' என்று போற்றுகின்றார் பரஞ்சோதி முனிவர்.

விநாயகப் பெருமான் எதனால் மகாவிஷ்ணுவின் சக்கரத்தை விழுங்கினார்? (காஞ்சிப் புராணத்தில் சிவஞான முனிவரின் அற்புத விளக்கம்):

விநாயகப் பெருமான் ஒருசமயம் திருமாலின் சக்கரத்தை விழுங்கித் திருவிளையாடல் புரிய, திருமால் செய்வதறியாது திகைத்து விகட நடனமொன்று புரிந்ததாகவும், அதுகண்டு விக்னேஸ்வர மூர்த்தி சிரிக்கையில் அச்சக்கரம் வெளிப்பட்டதாகவும் புராண நிகழ்வொன்றினைக் கேள்வியுற்றிருப்போம். மற்றொருபுறம் காஞ்சிப் புராணமோ 'திருமால் சார்பாக விஷ்வக்சேனரே விகட நடனம் ஆடிச் சக்கரத்தைப் பெற்றதாக' பதிவு செய்கின்றது. 

எதுவாயினும் 'விநாயகப் பெருமான் எதன் பொருட்டு சக்கரத்தை விழுங்கியிருப்பார்?' எனும் வினாவிற்கு, காஞ்சிப் புராணத்தை அருளியுள்ள சிவஞான முனிவர் பின்வரும் அற்புதத் திருப்பாடலில் விடை பகர்கின்றார்,
-
சிவபரம்பொருள் சலந்தரனை வதம் புரிவதற்குப் பயன்படுத்திய சக்கரத்தை, தன்னுடைய கண் விழியினையே மலராக்கிப் புரிந்த சிவபூசனையால் திருமால் பெறுகின்றார். எனினும் அச்சக்கரத்தில் சலந்தரனுடைய குருதியின் முடைநாற்றம் முற்றிலுமாய் அகலாதிருக்கின்றது. பின்னாளில் கருணைக் கடலான விக்னேஸ்வர மூர்த்தி அச்சக்கரத்தினை விழுங்குவதாகத் திருவிளையாடல் புரிந்து, விகட நடனத்தையே தனக்குரிய பூஜையாக ஏற்று, தன்னுள் பெருகும் மதநீரால் அவ்வாடையினைப் போக்கி; மணமேற்றி, அதனை மீண்டும் திருமாலுக்கு அளித்து அருள் புரிகின்றார். இத்தன்மையினால், 'வேண்டுவோரின் பழியினை நீக்கியருளும், தந்தையான சிவபரம்பொருளினும் மேம்பட்ட புகழ்பொருந்திய விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிவோம்' என்று போற்றுகின்றார் சிவஞான முனிவர்.    
-
(காஞ்சிபுராணம் - விகடசக்கர விநாயகக் கடவுள் வணக்கம்):
விழிமலர்ப் பூசனைஉஞற்றித் திருநெடுமால் பெறும்ஆழி மீளவாங்கி
வழியொழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி முடைநாற்றம் மாறுமாற்றால்
பொழிமதநீர் விரையேற்றி விகடநடப் பூசைகொண்டு புதிதா நல்கிப் 
பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த மதமாவைப் பணிதல் செய்வாம்

இனி விநாயக வணக்கத்துடன் துவங்கும் காஞ்சிப்புராணத்தின் முதல் திருப்பாடலையும் சிந்தித்து மகிழ்வோம்,
-
இருகவுள் துளை வாக்கு கார்க்கடங்கள் இங்குலிகக்
குரு நிறத்திழி தோற்றமுன் குலாய்த் தவழ்ந்தேறிப்
பரிதி மார்பினில் சமனொடு காளிந்தி பயிலும் 
திருநிகர்த்த சீர் ஐங்கரக் களிற்றினைச் சேர்வாம்
-
(சொற்பொருள்: கவுள் - கன்னம், வாக்கு(தல்) - வடித்தல், இங்குலிகம் - சிவப்பு, குரு - நிறம், நிறம் - மார்பு) 
-
(சுருக்கமான பொருள்):
'பொன்னிறமான சூரிய தேவனின் மார்பில்; கரிய நிறத்து மகனான யமனும்; மகளான காளிந்தியும் தவழ்வது போல், திருச்செவிகளினின்றும் பெருகும் கரிய மதநீர் பொன்னிறத் திருமேனியில் வழிந்தோடும் தன்மையினரான பிரணவ முகப் பெருங்கடவுளான விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சார்வோம்' என்று போற்றிப் பணிந்து, சிவபரத்துவம் பேணும் காஞ்சிப்புராண நூலினைத் துவங்குகின்றார் சிவஞான முனிவர்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் சைவ சித்தாந்த சாத்திரங்கள் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

முதற்கண் 14 சைவ சித்தாந்த சாத்திரங்களையும், அவைகளை அருளிச் செய்துள்ள 6 ஆச்சாரியர்களையும் காண்போம், 

1. திருவுந்தியார் - (திருவியலூர் உய்ய வந்த தேவ நாயனார்)
2. திருக்களிற்றுப்படியார் - (திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார். இவர் திருவுந்தியார் ஆசிரியரின் மாணவராவார்)
3. சிவஞான போதம் - (மெய்கண்ட தேவர்)
4. சிவஞான சித்தியார் - (அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட தேவரின் ஞான சீடராவார்)
5. இருபா இருபஃது  - (அருணந்தி சிவாச்சாரியார்) 
6. உண்மை விளக்கம் - (மனவாசகம் கடந்தார். இவர் மெய்கண்ட தேவரின் மாணாக்கர்களுள் ஒருவர்)
7. சிவப்பிரகாசம் - (உமாபதி சிவாச்சாரியார். இவர் அருணந்தி சிவாச்சாரியாரின் சீடரான மறைஞான சம்பந்தரின் ஞான சீடராவார்)
8. திருவருட்பயன் - (உமாபதி சிவாச்சாரியார்) 
9. வினாவெண்பா - (உமாபதி சிவாச்சாரியார்) 
10. போற்றிப் பஃறொடை - (உமாபதி சிவாச்சாரியார்)
11. கொடிக்கவி - (உமாபதி சிவாச்சாரியார்) 
12. நெஞ்சுவிடு தூது - (உமாபதி சிவாச்சாரியார்) 
13. உண்மை நெறி விளக்கம் - (உமாபதி சிவாச்சாரியார்)
14. சங்கற்ப நிராகரணம் - (உமாபதி சிவாச்சாரியார்)

சிந்தாந்த ஞானாசிரியர்களுள் உமாபதி சிவாச்சாரியார் மட்டுமே 8 சாத்திர நூல்களை இயற்றியளித்துள்ளார். 

இனி விநாயகப் பெருமானின் வணக்கப் பாடலுடன் துவங்கும் நான்கு சித்தாந்த ஆச்சாரியார்களின் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,  
-
(1)
திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் திருவடி மலர்களைப் போற்றியவாறு மெய்கண்ட தேவர் தன் சிவஞானபோதமெனும் சாத்திரத்தைத் துவங்குகின்றார், 
-
(சிவஞானபோதம் - மெய்கண்ட தேவர்)
கல்லால் நிழல்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே

(2)
'விநாயகப் பெருமானைப் போற்றித் துதித்து வழிபடுவோரின் அஞ்ஞானம் முற்றிலுமாய் விலகுவதோடல்லாமல், பிரமன்; திருமால் ஆகியோரின் செல்வங்களும் அளவில் சிறியதே என்றெண்ணும் வகையிலான (வீடுபேறான) திருவருட் செல்வத்தைப் பெற்று மகிழ்வர்' என்று அருணந்தி சிவாச்சாரியார் போற்றுகின்றார், 
-
(சிவஞான சித்தியார் - அருணந்தி சிவாச்சாரியார்):
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டன்பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும் ஒன்றோ என்னச் செய்யும் தேவே!!!

(3)
'சிவபரம்பொருள் அருளியுள்ள ஆகமப் பொருளினின்றும் வழுவாத தன்மையில் இச்சாத்திரத்தின் விளக்கவுரைகள் அமைந்திட, பிரணவ முகத்துக் கடவுளான விக்னேஸ்வரரை உள்ளத்திலிருத்தித் தொழுவோம்' என்று 'மனவாசகம் கடந்தார்' பணிந்தேத்துகின்றார், 
-
(உண்மை விளக்கம் - மனவாசகம் கடந்தார்)
வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்(று) ஐங்கரனைப்
பந்தமறப் புந்தியுள் வைப்பாம்

(4)
'விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பணிபவர்களது அஞ்ஞானம் விலகும்; வினைகள் சேராது' என்று அறிவுறுத்திப் பணிகின்றார் உமாபதி சிவாச்சாரியார். 
-
(சிவப்பிரகாசம் - உமாபதி சிவாச்சாரியார்):
ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு
களியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்
அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே

(5)
'விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுவோருக்கு மட்டுமே வேதாகம சாத்திரங்களின் உட்பொருள் எளிதில் சித்திக்கப் பெறும் ('ஏனையோருக்கு அவ்வுண்மைகள் புலப்படாது மறைந்திருக்கும்')' என்று தெளிவுறுத்திப் போற்றுகின்றார் உமாபதி சிவாச்சாரியார்,  
-
(திருவருட்பயன் - உமாபதி சிவாச்சாரியார்):
நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம்
கற்கும் சரக்கன்று காண்

ஒளவை தொழும் யானை முக தெய்வம் (நல்வழி; மூதுரை; கொன்றை வேந்தன்; ஆத்திச்சூடியில் விநாயக வணக்கப் பாடல்கள்):

தமிழ் மூதாட்டி என்று நம்மால் உரிமையோடும் அன்போடும் கொண்டாடப் பெறுபவர் ஒளவை. இத்திருப்பெயரிலேயே வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு பெண்ணின் நல்லாள் தோன்றி, தமிழ்ச் சமூகத்தினைப் பல்வேறு பரிமாணங்களில் செம்மைப் படுத்தி வந்துள்ளார் என்பர் சிலர். மற்றொரு சாரார் ஒரே ஒளவையே, சித்தர்களைப் போன்று, எண்ணிறந்த காலங்களுக்கு வாழ்ந்திருந்து; அவ்வப்பொழுது தோன்றி ஞான போதனைகளைச் செய்து வந்துள்ளார் என்பர். எதுவாயினும் ஒளவைக்கும் விநாயகப் பெருமானுக்குமான தொடர்பு மிகமிக இனிமையானது; தனித்துவமானது, விக்னேஸ்வர மூர்த்தியின் பூரணமான திருவருளைப் பெற்றிருந்தாள் நம் ஒளவையன்னை.  
-
இனி பொதுவில் குறிக்கப் பெறும் வெவ்வாறு காலகட்டத்து அவ்வையார்களின் பட்டியலைக் காண்போம், 
-
(1) சங்ககால ஒளவை: இவரே இளமைக் காலத்தில் விநாயகப் பெருமானை வேண்டி வடிவுறு மூப்பினை வரமாகப் பெற்ற தமிழ்ச் செல்வி, மூவேந்தர் தொடர்புடைய நிகழ்வுகளில் குறிக்கப் பெறும் தமிழன்னை. பெரும்பாலான வலைத்தளங்களில் சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடியுள்ளார் என்று பதிவு செய்கின்றனரே அன்றி, இளமையிலேயே முதுமை எய்தியிருந்த முக்கியக் குறிப்பினை, கவனக் குறைவாலோ அல்லது பிற காரணங்களினாலோ பதிவு செய்யாது விடுத்திருப்பது வருந்தத் தக்கது. வள்ளுவனாரின் திருக்குறளுக்கு, மதுரைப் பொற்றாமரைக் குளத்தில்; சங்கப் பலகையினை வரவழைத்து அரியதொரு அங்கீகாரம் கிடைக்கச் செய்தது இப்பெருமாட்டியே. 
-
(2) 2ஆம் ஒளவை: விநாயகர் அகவலெனும் அற்புதப் பனுவலை அருளிச் செய்தவர் இவரே. 
-
(3) 3ஆம் ஒளவை: ஆத்திச் சூடி; கொன்றை வேந்தன்; நல்வழி; மூதுரை முதலிய நூல்களைத் தந்தவர்
-
(4) 4ஆம் ஒளவை: மிகுதியான தனிப்பாடல் தொகுப்புகளைப் பாடியவர் இவரென்பார்.  

இனி 3ஆம் ஒளவையால் போற்றப் பெறும் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 
-
(1)
(நல்வழி - விநாயக வணக்கப் பாடல்)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்; கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே; நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா

(2)
(மூதுரை - விநாயக வணக்கப் பாடல்)
வாக்குண்டாம்; நல்ல மனமுண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

(3)
(கொன்றை வேந்தன் - விநாயக வணக்கப் பாடல்)
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
-
(பொருள்)
கொன்றையைத் திருமுடியில் சூடும் சிவபரம்பொருளின் திருச்செல்வனான விநாயகப் பெருமானின் சிவஞானமேயாகிய திருவடிகளை என்றுமே போற்றிப் பணிவோம்

(4)
(ஆத்திச் சூடி)
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
-
(பொருள்)
ஆத்தி மலரை அணிந்தருளும் சிவபரம்பொருளினால் பெரிதும் விரும்பப் பெறும் விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பணிவோம் ('அமர்ந்த' எனும் சொல்லுக்கு - 'விரும்பிய' என்றொரு பொருளும் உண்டு).

விநாயக வணக்கத்துடன் துவங்கும் குமரகுருபரரின் பாடல் தொகுப்புகள்:

17ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர் குமரகுருபரர், அவதாரக் காலம் 63 ஆண்டுகள் (1625 - 1688). அவதாரத் தலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் தலத்திற்கு வடபால் அமைந்துள்ள ஸ்ரீகைலாசம் எனும் பகுதி. தன்னுடைய 6ஆம் வயதில் செந்தூர் வேலவனின் பேரருளால் பேச்சுத் திறன் பெற்று 'கந்தர் கலி வெண்பா' எனும் பாமாலையை அருளிச் செய்தவர். இவர் மதுரையில்; திருமலை நாயக்கரின் சபையில் அரங்கேற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல்களை, உலகீன்ற மீனாட்சி அன்னையே, சிறு பெண் குழந்தையொன்றின் வடிவில் எழுந்தருளி வந்து; நாயக்க மன்னரின் மடிமீது அமர்ந்திருந்து கேட்டருளினாள் எனில் குமரகுருபர சுவாமிகளின் தவச்சிறப்பினை என்னென்று போற்றுவது.      

தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரை ஞானசிரியராகக் கொண்டு அப்பெருமகனாருக்குத் திருவடித் தொண்டு புரிந்து வந்தார் சுவாமிகள். பின்னர் குருநாதரின் கட்டளையினை ஏற்றுக் காசித் திருத்தலத்தில் பன்னெடுங்காலம் திருத்தொண்டு புரிந்து வந்தார், இவரின் முத்தித் தலமும் காசியே. குருபூஜைத் திருநாள் வைகாசி மாதத் தேய்பிறையில் வரும் திருதியைத் திதி (அதாவது வைகாசி மாத பௌர்ணமியை அடுத்த 3ஆம் நாளில் வரும் திருதியைத் திதி) .

சுவாமிகள் அருளிச் செய்துள்ள 16 பாடல் தொகுப்புகளில், 'கயிலைக் கலம்பகம்; காசித் துண்டி விநாயகர் பதிகம்' எனும் இவ்விரு தொகுப்புகளும் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை. மீதமுள்ள 14 தொகுப்புகளில், 8 தொகுப்புகள் விநாயக வணக்கத் திருப்பாடலுடன் துவங்குகின்றன, அவற்றுள், பதிவின் நீளம் கருதி, 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' மற்றும் 'வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ்' எனும் இவ்விரு தொகுப்புகளையும் விடுத்து, ஏனைய 6 தொகுப்புகளின் விநாயக வணக்கத் திருப்பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம், 

1. கயிலைக் கலம்பகம் (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
2. காசிக் கலம்பகம் 
3. காசித் துண்டி விநாயகர் பதிகம்  (இந்நூல் நமக்கின்று கிடைக்கப் பெறவில்லை)
4. சகலகலாவல்லி மாலை 
5. சிதம்பர மும்மணிக் கோவை 
6. சிதம்பரச் செய்யுட் கோவை 
7. திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா 
8. திருவாரூர் நான்மணிமாலை
9. தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
10. நீதிநெறி விளக்கம் 
11. பண்டார மும்மணிக் கோவை
12. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை
13. மீனாட்சியம்மை குறம் 
14. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் 
15. மதுரைக் கலம்பகம் 
16. வைத்தீசுவரன் கோயில் ஸ்ரீமுத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் 

(1)
(காசிக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கி
நேசத் தளைப்பட்டு நிற்குமே - மாசற்ற
காரார் வரையீன்ற கன்னிப்பிடி அளித்த
ஓரானை வந்தென் உளத்து
-
(இறுதி இரு வரிகளின் பொருள்)
வரையீன்ற (மலைமகளான) கன்னிப் பிடி ('பெண் யானை' போன்ற) உமையன்னை அளித்தருளிய விநாயகக் கடவுளை உள்ளத்தில் இருத்தித் தொழுவோம்

(2)
(சிதம்பர மும்மணிக்கோவை - விநாயக வணக்கப் பாடல்)
செம்மணிக்கோவைக் கதிர்சூழ் தில்லைச் சிற்றம்பலவன்
மும்மணிக்கோவைக்கு வந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ
அஞ்சக்கரக் கற்பகத்தார் இறைஞ்சும்; அஞ்சு
கஞ்சக்கரக் கற்பகம்

(3)
(திருவாரூர் நான்மணி மாலை - விநாயக வணக்கப் பாடல்)
நாடும் கமலேசர் நான்மணி மாலைக்கு மிகப்
பாடும் கவிதைநலம் பாலிக்கும் - வீடொன்ற
முப்போதகத்தின் முயல்வோர்க்கு முன்னிற்கும்
கைப் போதகத்தின் கழல்

(4)
(பண்டார மும்மணிக் கோவை - விநாயக வணக்கப் பாடல்)
எண்திசைக்கும் சூளாமணி மாசிலாமணிசீர்
கொண்டிசைக்கு(ம்) மும்மணிக் கோவைக்குக் கண்டிகைபொற்
பைந்நாகத்தான் அனத்தான் பாற்கடலான் போற்றஅருள்
கைந்நாகத்(து) ஆனனத்தான் காப்பு
-
தன்னுடைய குருநாதரான, தருமை ஆதீனத்தின் 4ஆம் குருமூர்த்திகளான ஸ்ரீமாசிலாமணித் தேசிகரைப் போற்று முகமாக அருளிச் செய்துள்ள பாமாலையிது. 

(5)
(மதுரை மீனாட்சியம்மை குறம் - விநாயக வணக்கப் பாடல்)
கார்கொண்ட பொழில்மதுரைக் கர்ப்பூரவல்லி மணம் கமழும் தெய்வத்
தார்கொண்ட கருங்குழல் அங்கயற்கண் நாயகிகுறம் செந்தமிழால் பாட
வார்கொண்ட புகர்முகத்(து) ஐங்கரத்(து) ஒருகோட்(டு) இருசெவி மும்மதத்து நால்வாய்ப்
போர்கொண்ட கவுள்சிறுகண் சித்திவிநாயகன் துணைத்தாள் போற்றுவாமே.

(6)
(மதுரைக் கலம்பகம் - விநாயக வணக்கப் பாடல்)
புந்தித் தடத்துப் புலக்களிறோடப் பிளிறுதொந்தித்
தந்திக்குத் தந்தை தமிழ்க்குத(வு) என்ப(து)என்; தண்ணளிதூய்
வந்திப்பதும்தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்துநின்று
சிந்திப்பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே

அபிராமி பட்டர் போற்றும் யானை முக தெய்வம் (அபிராமி அந்தாதியின் விநாயக வணக்கப் பாடல்):

18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்தின் தவப்பயனாய் அவதரித்த அருளாளர் அபிராமி பட்டர். அவதாரத் தலம் திருக்கடையூர். இயற்பெயர் சுப்பிரமணியர். முதலாம் சரபோஜி மன்னரின் முன்னிலையில், 100 திருப்பாடல்களைக் கொண்ட 'அபிராமி அந்தாதி' எனும் ஒப்புவமையற்ற செந்தமிழ்ப் பனுவலை அருளிச் செய்து, அபிராமி அன்னையின் திருவருளால் அமாவாசையன்று முழுநிலவைத் தோன்றுமாறு செய்வித்த உத்தம சீலர். 

சீர்மிகு சைவ மரபில், அருளாளர்கள் எந்தவொரு தெய்வத்தைப் போற்றுவதாக இருப்பினும், முதல் வணக்கத்தினை பெற்றருள்பவர் நம் விநாயகப் பெருமானன்றோ! அபிராமி பட்டரும் அம்முறையிலேயே காதலோடு விக்னேஸ்வர மூர்த்தியைப் போற்றிப் பரவி ஆசி பெற்ற பின்னரே தன்னுடைய பனுவலைத் துவங்குகின்றார்.

(அபிராமி அந்தாதி - விநாயகர் காப்புப் பாடல்)
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர் தம் பாகத்(து) உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே; நிற்கக் கட்டுரையே!!!

வாரியார் சுவாமிகள் அருளியுள்ள காங்கேயநல்லூர் சுந்தர விநாயகர் பதிகம்:


பிரசித்தி பெற்ற காங்கேயநல்லூர் முருகன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுந்தர விநாயகரைப் போற்றி நம் வாரியார் சுவாமிகள் அருளியுள்ள திருப்பதிகப் பாடல்களை இப்பதிவில் சிந்தித்து மகிழ்வோம்,

(1)
ஐங்கரத்தால் ஐந்தொழிலும் ஆற்றுகின்ற 
ஆனை முகத்தரசே; எம் ஆதிமூர்த்தி 
இங்குனது கருணை எனக்கில்லையாயின் 
எங்கடைவேன் எவர்க்குரைப்பேன் யாது செய்வேன் 
செங்கைநிறை ஆமலகக் கனிபோல் உன்றன் 
திருவருள் தந்தருள் புரிவாய் தேவ தேவே 
துங்கமிகு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே! 
-
(பொருள்: ஆமலகக் கனி - நெல்லிக்கனி)

(2)
கதியுதவு கணநாத; கருணைக் குன்றே 
கற்பகமே; கற்பகத் தீங்கனியே; கங்கை 
நதியுதவு திருமைந்த; நம்பியாண்டார் 
நவிலும் நறும் தமிழ்க்கவியை நயந்த தேவே 
விதியுதவு பிறவிதனை வேண்டேன் உன்றன் 
விரைமலர்த்தாள் வேண்டினனால்; வேத கீதத் 
துதியுதவு காங்கேயநல்லூர் மேவும் 
சுந்தர விநாயக மெய்த் துரிய வாழ்வே!!!