தமிழ் மொழியை முதன் முதலில் அருளிய விநாயகப் பெருமான் (ஆதாரபூர்வ விளக்கங்கள்):

இயல்; இசை; நாடகம் எனும் முத்தமிழின் முறைமைகள் முழுவதையும், எண்ணில் பலயுகங்களுக்கு முன்னரே, தன் திருக்கரங்களால் முதன் முதலில் எழுதி அருளியவர் பிரணவ முகத்து தெய்வமான நம் விநாயகப் பெருமானாவார். அருணகிரிப் பெருமான் 'கைத்தல நிறைகனி' திருப்புகழில் இவ்வரிய செய்தியினைப் பதிவு செய்து போற்றுகின்றார்,
-
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே

மிகமிக முற்பட்ட காலகட்டத்து நிகழ்வாதலால் 'முற்பட எழுதிய' என்று அருணகிரியார் குறிக்கின்றார். அதாவது, 'சிவபெருமான் அகத்தியருக்கு தமிழ் மொழியினை அருளு முன்னரே', 'அகத்தியர் தென்பகுதிக்கு வருகை புரிவதற்கு முன்னரே'. 

'முற்படு கிரிதனில் முற்பட எழுதிய' எனும் வரி 'மகாபாரதம் எழுதிய நிகழ்வையே குறிக்கின்றது' என்று தவறாகப் பொருள் கொள்வோரும் உண்டு. திருமுருக வாரியார் சுவாமிகள் உள்ளிட்ட சமயச் சான்றோர் யாவரும், இத்திருப்பாடலுக்கான தத்தமது விளக்கவுரைகளில் 'முத்தமிழின் முறைமைகளை விக்னேஸ்வர மூர்த்தி எழுதியதாகவே' தெளிவுறுத்தியுள்ளனர். 

மேலும் மகாபாரதம் எழுதப் பெற்றிருப்பதோ வடமொழியில், 'முத்தமிழ்' எனும் தெளிவான குறியீட்டினை வடமொழியென்று பொருள் காண்பது எவ்விதத்திலும் பொருந்தாது.

மற்றொருபுறம், 'விக்னேஸ்வர மூர்த்தி பாரதம் எழுதிய நிகழ்வினை' தம்முடைய திருப்பாடல்கள் தோறும் 'பாரதம்' என்று, இதிகாசப் பெயரைக் குறிப்பிட்டே பதிவு செய்து வரும் அருணகிரியாரின் பாடல் நடையினையும் உணர்ந்து தெளிவுறுவோம், 

('மாய வாடை' எனத் துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்),
பாயு மாமத தந்தி முகம்பெறும்
ஆதி பாரதமென்ற பெரும்கதை
பார மேருவிலன்று வரைந்தவன் இளையோனே!!!

('குகையில் நவ நாதரும்' என்று துவங்கும் பொதுத் திருப்புகழ்), 
பகைகொள் துரியோதனன் பிறந்து
     படைபொருத பாரதம் தெரிந்து
          பரியதொரு கோடு கொண்டு சண்ட ...வரைமீதே
-
பழுதற வியாசன் அன்றியம்ப
     எழுதிய விநாயகன் சிவந்த
          பவள மதயானை பின்பு வந்த ...முருகோனே

முத்தமிழை முதன்முதலில் நமக்கருளிய, பன்னெடுங்காலமாய்த் தமிழர் உள்ளிட்ட பாரத தேசத்தினர் அனைவரின் வழிபடு தெய்வமாக விளங்கி வரும் நம் விக்னேஸ்வர மூர்த்தியை, வடநாட்டு தெய்வமென்று பிரிவினை பேசியுழல்வது மடமையினும் மடமையன்றோ!!!

வித்தக மருப்புடைய பெருமாளே:

சைவ மரபின் தோத்திரப் பாடல்களில் 'பெருமாளே' எனும் தனித்துவமான; இனிமையான சொல்லாடலைத் துவக்கி வைத்தவர் நம் தலைவரான அருணகிரிப் பெருமானேயாவார். அருணகிரியாரின் அவதாரக் காலத்திற்கு முன்னர் வரையிலும் சைவத் திருமுறைகளிலும்; பனுவல்களிலும் 'பெருமானே' எனும் சொற்பிரயோகமே பொதுவில் கைக்கொள்ளப் பெற்று வந்துள்ளது (சில உதாரணங்கள்: 'பெம்மான் இவனன்றே', 'பித்தா பிறைசூடி பெருமானே'). பெரிய புராணத் திருப்பாடலொன்றில், தியாகேச மூர்த்தியை 'தெய்வப் பெருமாள்' என்று அரிதாகக் குறிக்கின்றார் நம் சேக்கிழார் அடிகள்,
-
(பெரிய புராணம்: நமிநந்திஅடிகள் புராணம்: திருப்பாடல் 29)
தெய்வப் பெருமாள் திருவாரூர்ப்
   பிறந்து வாழ்வார் எல்லாரும்
மைவைத்தனைய மணிகண்டர்
   வடிவேயாகிப் பெருகொளியால்
மொய்வைத்தமர்ந்த மேனியராம்
   பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்தஞ்சி அவனிமிசை
   விழுந்து பணிந்து களிசிறந்தார்

அருணகிரிப் பெருமான் எண்ணிலடங்கா திருப்பாடல்களில் ஆறுமுகக் கடவுளை 'பெருமாளே' என்று போற்றி மகிழ்கின்றார். மேலும் முழுமுதற் பொருளான நம் விநாயகப் பெருமானையும் 4 திருப்பாடல்களில் அவ்விதமே அகம்குளிரப் போற்றுகின்றார்.

விக்னேஸ்வர மூர்த்திக்கென அருளிச் செய்துள்ள 5 தனித் திருப்பாடல்களுள், பின்வரும் 4 திருப்பாடல்களில் 'பெருமாளே' என்று வேழ முகத்து இறைவனைப் பணிந்தேத்துகின்றார்,
-
1. 'கைத்தல நிறைகனி' என்று துவங்கும் திருப்பாடல் (அக்கண மணமருள் பெருமாளே)
-
2. 'பக்கரை விசித்திரமணி' என்று துவங்கும் திருப்பாடல் (வித்தக மருப்புடைய பெருமாளே)
-
3. 'உம்பர் தரு' என்று துவங்கும் திருப்பாடல் (ஐந்து கரத்தானைமுகப் பெருமாளே)
-
4. 'நினது திருவடி' என்று துவங்கும் திருப்பாடல் (எதிரும் நிசிசரரைப் பலியிட்டருள் பெருமாளே)
-
5. 'விடமடைசு வேலை' என்று துவங்கும் திருப்பாடல் (அறிவருளும் ஆனை முகவோனே)

தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
-
உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
     ஒண்கடலில் தேனமுதத்துணர்வூறி
-
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
     எந்தன் உயிர்க்காதரவுற்றருள்வாயே
-
தம்பி தனக்காக வனத்தணைவோனே
     தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
-
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
     ஐந்து கரத்தானைமுகப் பெருமாளே!!!

அடியவர்க்கு அருளும் ஞானத் தொப்பை விநாயகர்:

'இருநோய் மலத்தை' என்று துவங்கும் பொதுத் திருப்புகழில், 'பிறவியாகிய பெருநோயை அறுத்தருள்பவரும், துன்பங்கள் யாவையும் பொடிப்பொடியாகுமாறு செய்தருள்பவரும், தனக்கேஉரிய தனித்துவமான முறையில் அடியவர்களுக்குப் பேரருள் புரிபவரும், சிவஞானமேயான தொப்பையை உடையவருமாகிய விக்கின விநாயகப் பெருங்கடவுள் மகிழும் வேலாயுத தெய்வமே' என்று சிவகுமாரர்களைப் போற்றி மகிழ்கின்றார் நம் அருணகிரியார். 
-
கருநோய் அறுத்தெனது மிடிதூள் படுத்திவிடு
     கரிமா முகக்கடவுள் அடியார்கள்
-
கருதா வகைக்குவரம் அருள்ஞான தொப்பைமகிழ்
     கருணா கடப்பமலர் அணிவோனே!!!

எங்கள் விநாயகன் (விக்னேஸ்வர மூர்த்தியைப் போற்றும் திருவானைக்கா திருப்புகழ்):

'அஞ்சன வேல்விழி' என்று துவங்கும் ஆனைக்கா திருப்புகழில் 'பிரணவ முகத்துப் பெருங்கடவுளான மகாகணபதியை' அகம் குழைந்து போற்றிப் பரவுகின்றார் அருணகிரியார், 
-
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
     அங்குச பாசகர ப்ரசித்தன்ஒர்
          கொம்பன் மகோதரன் முக்கண்விக்ரம ...கணராஜன்
-
கும்பிடுவார் வினை பற்றறுப்பவன்
     எங்கள் விநாயகன் நக்கர்பெற்றருள்
          குன்றைய ரூபக கற்பகப்பிளை ...இளையோனே

இனி மேற்குறித்துள்ள திருப்பாடல் வரிகளை ஒவ்வொன்றாகச் சிந்தித்து மகிழ்வோம், 

(குஞ்சர மாமுகம்): யானையின் அழகிய திருமுகத்தைக் கொண்டருள்பவர்
-
(விக்கின ப்ரபு): விக்கினங்கள் அனைத்தையும் நீக்கியருளும் ஒப்புவமையற்ற இறைவர் 
-
(அங்குச பாசகர ப்ரசித்தன்): 'தன்னை அடக்குவோர் ஒருவரும் இலர் ' என்று உணர்த்தியருளும் விதமாக, யானையை அடக்கும் பாச அங்குசங்களைத் தன் திருக்கரங்களில் ஏந்தியருள்பவர்
-
(ஒர் கொம்பன்): ஒற்றைக் கொம்பினை உடைய மூர்த்தி,
-
(மகோதரன்) - அண்டசராசரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பெருவயிறினைக் கொண்டருள்பவர் 
-
(முக்கண்விக்ரம கணராஜன்): சிவபரம்பொருளைப் போலவே சூரிய; சந்திர; அக்கினியாகிய மூன்று திருக்கண்களைக் கொண்டருள்பவர். அதி பராக்கிரமர்.
-
(கும்பிடுவார் வினை பற்றறுப்பவன்): 'விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்' எனும் 11ஆம் திருமுறையின் சத்தியத்தினை அருணகிரியார் மீண்டுமொரு முறை தெளிவுறுத்துகின்றார்,
-
(எங்கள் விநாயகன்): எத்துனை இனிமையான சொற்கள், அடியவர் திருக்கூட்டத்தினர் அனைவரின் சார்பாகவும் 'எங்கள் விநாயகர்' என்று உரிமையோடு நெகிழ்ந்து போற்றுகின்றார் (தனக்கு மேலொரு தலைவன் இல்லாத தன்மையை 'விநாயகன்' எனும் திருநாமம் பறைசாற்றுகின்றது).
-
(நக்கர்பெற்றருள் குன்றைய ரூபக): பராசக்தியோடு கூடிய ஆதிப்பரம்பொருளான சிவபெருமான் ஈன்றருளிய, குன்றினைப் போன்ற பெருவடிவமுடையவர், 
-
(கற்பகப் பிளை) - அடியவர் வேண்டுவனவற்றைக் கற்பக மரம் போலும் அளித்தருள்பவர். கற்பக விநாயகக் கடவுளாக பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள திருமூர்த்தி.

அம்மையப்பரான சிவசக்தியரின் அருள் வடிவமே நம் விநாயகப் பெருமான், அம்மையப்பருக்கும் விக்னேஸ்வர மூர்த்திக்கும் யாதொரு பேதமுமில்லை. அம்பிகை பாகத்து அண்ணலான சிவபெருமான் ஆன்மாக்கள் மீதுள்ள அளப்பரிய கருணையால் விக்கின விநாயகப் பெருங்கடவுளாக மற்றுமொரு வடிவில் தோன்றித் திருவிளையாடல் புரிகின்றார்.

விநாயக வணக்கத்துடன் துவங்கும் அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்; கந்தர் அந்தாதி; கந்தர் அனுபூதி பாடல் தொகுப்புகள்:

(கந்தர் அலங்காரம் - விநாயக வணக்கத் திருப்பாடல்)

அடல்அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வட அருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடப(ட) எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கடதட கும்பக களிற்றுக்(கு) இளைய களிற்றினையே!!!
-
(பொருள்):
'அருணை நகரிலுள்ள திருக்கோயிலில், வடவாயிலுக்கு அருகே, 'அவ்வாயிலின் தென்புறத்தில் எழுந்தருளியுள்ள, அடியவர்களின் 'தட பட' எனும் தலைக் குட்டுகளையும், இனிப்புடன் கூடிய நிவேதன உணவு வகைகளையும் ஏற்று அருள் புரியும் விநாயகப் பெருமானின் இளைய சகோதரனாகிய' வேலாயுதக் கடவுளைக் கண்டு கொண்டேன்' என்று விநாயக வணக்கப் பாடலில் கந்தவேளையும் இணைத்து நயம் பட போற்றுகின்றார் அருணகிரியார். 

(கந்தர் அந்தாதி - விநாயக வணக்கத் திருப்பாடல்):

வாரணத்தானை; அயனை; விண்ணோரை; மலர்க்கரத்து
வாரணத்தானை; மகத்துவென்றோன் மைந்தனைத்; துவச
வாரணத்தானைத் துணை நயந்தானை; வயலருணை;
வாரணத்தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே
-
(பொருள்): 
'ஐராவத யானையையுடைய இந்திரன்; நான்முகக் கடவுள்; ஏனைய விண்ணவர்கள்; மலர் போன்ற திருக்கரத்தில் பாஞ்சஜன்யம் எனும் சங்கினை ஏந்தியருளும் திருமால் ஆகியோரை (தட்ச யாக சாலையில் - வீரபத்திரரை ஏவி) வெற்றி கொண்டருளிய சிவபரம்பொருளின் மூத்த திருப்புதல்வரும், கோழிக்கொடியினை உடைய ஆறுமுகக் கடவுளை இளையோனாய்க் கொண்டருள்பவரும், வயல்கள் சூழ்ந்த அருணையம் பதியில் எழுந்தருளி இருப்பவரும், யானை முக கஜமுகாசுரனை வெற்றி கொண்டருளியவருமான விநாயகப் பெருமானின் திருவடிகளை வாழ்த்துகின்றேன்' என்று பணிந்தேத்துகின்றார் நம் அருணகிரியார். 

(கந்தர் அனுபூதி - விநாயக வணக்கத் திருப்பாடல்)

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்தருள் சண்முகனுக்(கு) இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்
-
(பொருள்)
'கல் போன்ற நெஞ்சத்தையும் பக்தியால் கசிந்துருக வைக்கும் தன்மையில், தன் திருவடிகளில் தஞ்சமடைந்தோர்க்குப் பேரருள் புரியும் குமாரக் கடவுளுக்கு, இலக்கண முறைமைகள் பிறழாது புனையவிருக்கும் இத்திருப்பாடல்கள் செம்மையாக அமைந்து சிறப்புற்றிட, ஐந்து திருக்கரங்களைக் கொண்டருளும் வேழ முகத்துக் கடவுளான விநாயகப் பெருமானின் திருவடிகளைப் பணிகின்றேன்' என்று போற்றிப் பரவுகின்றார் நம் அருணகிரிப் பெருமான்.

ஐந்தொழில் புரிந்தருளும் விக்னேஸ்வர மூர்த்தி (கந்தபுராண நுட்பங்கள்):

ஆதிப்பரம்பொருளான சிவபெருமானே 'படைத்தல்; காத்தல்; அழித்தல்; மறைத்தல்; அருளல்' எனும் ஐந்தொழில் முதல்வன் எனும் சத்தியத்தைக் கந்தபுராணத்தின் எண்ணிறந்த திருப்பாடல்கள் பறைசாற்றுகின்றன. 

சிவமூர்த்தி இத்தொழில்களை தானே நேரடியாகப் புரிவதில்லை, பிரமன்; ஸ்ரீமகாவிஷ்ணு; உருத்திரன்; மகேஸ்வரன்; சதாசிவன் ஆகிய உத்தமமான தெய்வங்களை முறையே அந்தந்த தொழில்களுக்கு நியமித்து; அவர்களுக்குள் உயிர்க்குயிராக தானே எழுந்தருளியிருந்து தொழிற்படுத்தி வரும் காரணப் பொருளாக விளங்கி அருளுகின்றார். 

மேற்குறித்துள்ள சிவபரத்துவ மேன்மையினைத் ததீசி முனிவரானவர் தட்சனுக்கு எடுத்துரைக்கும் பின்வரும் திருப்பாடலை இனிக் காண்போம், 
-
(தக்ஷ காண்டம் - ததீசிப் படலம்: திருப்பாடல் 44)
அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
பரமன் நின்மலன் ஏதுவுக்(கு)ஏதுவாம் பகவன்
ஒருவர் பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
இருமையாய்உறை பூரணன் யாவர்க்கும் ஈசன்

இனி பதிவின் மையக் கருத்திற்குள் செல்வோம், சிவபரம்பொருள் விநாயகப் பெருமானைத் தோற்றுவித்து அனுப்ப, மகா கணபதியானவர் யுத்த களத்தில் கஜமுகாசுரனை வென்று; பெருச்சாளி வடிவிலிருந்த அவன் மீது எழுந்தருளித் தோன்றுகின்றார். அசுரனால் கணக்கற்ற காலம் அவதியுற்றிருந்த தேவர்கள் யாவரும் பெருமகிழ்வுடன், விக்னேஸ்வர மூர்த்தியைச் சூழ்ந்து நின்று துதிக்கின்றனர், 

'விநாயகப் பெருமானே, ஐந்தொழிலைப் புரிந்து வரும் நீங்களே, எங்களின் தாங்கொணாத் துயரைப் போக்கியருள இவ்வித வடிவில் எழுந்தருளியுள்ளீர்கள்' என்று போற்றுகின்றனர் (தேவர்கள் கணேஸ்வர மூர்த்தியை 'என்றுமே நிலைத்துள்ள சிவமாகிய பரம்பொருளின் வடிவமாக உணர்ந்து போற்றியுள்ள' அற்புதத் திருப்பாடலிது), 
-
(தக்ஷ காண்டம் -  கயமுகன் உற்பத்திப் படலம்: திருப்பாடல் 255)
காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவும் 
தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே
ஏப்படும் செய்கையென்ன எமதுளம் வெதும்பும் இன்னல்
நீப்பது கருதியன்றோ நீஅருள் வடிவம் கொண்டாய்

தேவர்கள் மேலும் தொடர்கின்றனர், 'விநாயகப் பெருமானே, உங்களிடமிருந்து பிறந்த ருக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களே உங்களை அறியஇயலாமல் திகைத்திருக்க, எங்கள் சிற்றறிவால் உங்களை அறிந்துவிடவும் கூடுமோ? ஆதலின் தாயும்; தந்தையுமாய் விளங்கியருளும் நீங்கள் எங்கள் புகழுரைகளைச் செவி சாய்த்து அருளல் வேண்டும்' என்று திருவடி தொழுகின்றனர் (குறிப்பு: உங்களிடமிருந்து பிறந்த வேதம் என்று போற்றுவதிலிருந்து, தேவர்கள் 'கணபதியை, ஐயத்திற்கு இடமின்றித் தனிப்பெரும் தெய்வமாகிய அம்மையப்பரின் அருள் வடிவமென்று உணர்ந்துள்ளனர்' என்பது தெளிவு). 
-
(தக்ஷ காண்டம் -  கயமுகன் உற்பத்திப் படலம்: திருப்பாடல் 256)
உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை
இன்னதென்(று) உணர்ந்ததில்லை யாமுனை அறிவதெங்ஙன்
அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர்
பன்னிய புகழ்ச்சியாவும் பரிவுடன் கேட்டி போலாம்

இந்நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னதான விநாயகப் பெருமானின் தோற்றப் பகுதியிலேயே நம் கச்சியப்ப சிவாச்சாரியார், 'அம்பிகை பாகத்து அண்ணலே விநாயகப் பெருமானாக மற்றுமொரு அருள் வடிவம் கொண்டருள்வதனை' பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார், 
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 150)
மருளறப் புகலு(ம்) நான்மறைகளில் திகழு மெய்ப்
பொருளெனப்படும் அவன்; புவனமுற்றவர்கள் தம்
இருளறுத்(து)அவர் மனத்திடர் தவிர்த்தருள; ஓர்
அருள் உருத்தனை எடுத்(து) அவதரித்துளன் அவன்

பரஞ்சோதியார் வடநாட்டிலிருந்து கொணர்ந்த வாதாபி கணபதியால் விநாயக வழிபாடு பரவியதா? (போலிப் பரப்புரைகளும் முறையான விளக்கங்களும்):

பரஞ்சோதியார் எனும் நம் சிறுதொண்டர் வடநாட்டிலுள்ள வாதாபி நகர மன்னரொருவரைப் போரில் வென்று வந்த நிகழ்வினைப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. எனினும் அங்கிருந்து எந்தவொரு விக்கிரகத் திருமேனியையும் கொண்டு வந்ததாகச் சேக்கிழார் பெருமான் குறிக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, பரஞ்சோதியார் வடநாட்டிலிருந்து கணபதி விக்கிரகத்தைக் கொணர்ந்த காலகட்டமுதல் தான், தமிழகத்தில் விநாயக வழிபாடு துவங்கிப் பரவியதாக ஒரு தொடர்ப் பொய்ப் பரப்புரை நடந்தேறி வருகின்றது. அது குறித்து இப்பதிவில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

சிறுதொண்டர் வாழ்ந்திருந்த 7ஆம் நூற்றாண்டு காலகட்டத்திற்கு மிகமிக முற்பட்ட காலகட்டத்திலேயே, செங்காட்டங்குடி 'கணபதீஸ்வரம்' எனும் பெயராலேயே அறியப் பெற்று வந்துள்ளதையும், 'விநாயகப் பெருமானாலேயே இத்தலம் தோற்றுவிக்கப் பெற்றுள்ளது' என்பதையும் விவரிக்கும் பின்வரும் கந்தபுராணத் திருப்பாடல்களை இனிக் காண்போம், 

(1)
விநாயக மூர்த்தி கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்தருள, அந்த அசுரனனின் உடலிலிருந்து வெளிப்பட்ட குருதி அப்பகுதி முழுவதும் பரவ, அது முதல் அத்தலம் செங்காடு என்று அறியப் பெறுகின்றது,  
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 250)
ஏடவிழ் அலங்கல் திண்தோள் இபமுகத்து அவுணன் மார்பில் 
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர் பெற்றின்னும் காண்தக இருந்ததம்மா
-
(சொற்பொருள்: நீத்தம் - வெள்ளம், கான் - காடு, செய்ய காடு - செங்காடு)

(2)
பின்னர் விக்னேஸ்வர மூர்த்தி அச்செங்காட்டில் சிவலிங்கத் திருமேனியொன்றைப் பிரதிஷ்டை செய்து, பெரும் காதலுடன் சிவபரம்பொருளைப் பூசித்துப் பணிகின்றார். அதுமுதல் அத்தலம், 'கணபதீஸ்வரம்' என்று போற்றப் பெற்று, இன்றும் நம்மால் தரிசித்து மகிழக்கூடிய தன்மையில் சிறப்புடன் விளங்கி வருகின்றது,  
-
(தக்ஷ காண்டம்: கயமுகன் உற்பத்திப் படலம் - திருப்பாடல் 264)
மீண்டு செங்காட்டில் ஓர்சார் மேவி மெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியும் தாதை தன்னுருத் தாபித்தேத்திப்
பூண்ட பேரன்பில் பூசை புரிந்தனன் புவியுளோர்க்குக்
காண்தகும் அனைய தானம் கணபதீச்சரம் அதென்பார்

(3)
மேலும் சம்பந்த மூர்த்தி கணபதீஸ்வரம் எனும் இத்திருப்பெயரைக் கொண்டே தம்முடைய திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலையும் நிறைவு செய்கின்றார்,
-
(சம்பந்தர் தேவாரம்: கணபதீஸ்வரம் - திருப்பாடல் 1)
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங்குடிஅதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச்சரத்தானே

கணபதி பிரசித்தி பெற்றிருந்த தலமாதலால் நம் சிறுதொண்டர் வடநாட்டிலுள்ள விநாயகத் திருமேனியொன்றினைச் செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்திருக்கக் கூடும். எனினும் விநாயக வழிபாடு மிகமிகத் தொன்மையானது, 275 தேவாரத் திருத்தலங்களில் எண்ணிறந்த தலபுராண நிகழ்வுகள் விநாயக மூர்த்தியோடு தொடர்புடையன (சில உதாரணங்கள்: கச்சி அனேகதங்காவதம், திருவலிவலம்; திருவலஞ்சுழி). 

'தமிழ்க்குடியினர் இல்லங்களிலும்; உள்ளங்களிலும் பன்னெடுங்காலமாய் விநாயகப் பெருமானைப் போற்றியும் பூசித்தும் வந்துள்ளனர்' எனும் சத்தியத்தினை மேற்குறித்துள்ள அகச் சான்றுகள் வாயிலாக உணர்ந்துத் தெளிவுறுவோம், போலிப் பரப்புரைகளைப் புறம் தள்ளுவோம்.